

இன்று நாம் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி போன்றவை குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதே வேளையில் வேலைக்குச் செல்லும் ஒரு பெண், தன் குடும்ப வாழ்க்கையையும் அலுவலகப் பொறுப்புகளையும் சமநிலையில் காக்கப் போராடிக்கொண்டிருப்பதை வசதியாக மறந்துவிடுகிறோம்.
பல ஆண்டுகளாகக் கடமை உணர்வோடு வேலை செய்த ஒரு பெண், மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பியவுடன் அலுவலகத்தில் எதிர்நோக்கும் சூழ்நிலை எப்படி இருக்கிறது? அந்த ஆண்டில் மூன்று மாதங்களே வேலைக்கு வந்திருக்கிறார் என்பதற்காகச் செயல்திறன் மதிப்பீட்டில் குறைந்த மதிப்பெண் அளிக்கப்படுவது எவ்வளவு அநியாயம். மூன்று மாதங்களில் ஏன் நீங்கள் திறமையாகச் செயல்படவில்லை என்று மேலதிகாரிகள் கேட்கிறார்கள்.