

என் அத்தையின் பெயர் தங்கம்மாள். என் அப்பாவினுடைய அக்கா. அவருக்குக் காது கேட்காது. காதுதான் கேட்காதே தவிர, மற்றபடி சைகையால் எதைச் சொன்னாலும் நன்றாகப் புரிந்துகொள்வார். நாட்டை எந்தக் கட்சி ஆள்கிறது, எந்த வீட்டுக்கு யார் வந்திருக்கிறார்கள், எந்தக் கடையில் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என எல்லாம் என் அத்தைக்கு அத்துப்படி.
கணவரை இழந்தவர் என் அத்தை. அவரை எப்போதும் குங்கும நிறம், நீல நிறப் புடவையில்தான் பார்த்திருக்கிறேன். வெள்ளை ரவிக்கை. வேறெந்த நிறத்திலும் புடவை உடுத்தியதில்லை. பொட்டு, பூ வைத்தும் பார்த்ததில்லை. வீட்டில் எந்த நிகழ்வுக்கு வந்தாலும் எப்போதுமே ஓரமாக நின்றுதான் அதைக் கவனிப்பார். கூட்டத்துக்குள் வரவே மாட்டார். அதற்கான காரணம் சிறுவயதில் எனக்கு புரியவில்லை. வளர்ந்த பின்புதான் அவருக்குக் கணவர் இல்லை என்கிற ஒரு காரணத்திற்காகவே, அனைத்திலும் அவர் ஒதுங்கி நிற்கிறார் என்பது புரிந்தது. இந்தச் சமூகமும் வலுக்கட்டாயமாக அவரை ஒதுங்கி நிற்க வைத்திருக்கிறது என்பது புரிந்தபோது, தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. உடம்பு முடியாமல் மாமா போய் சேர்ந்தார். அதற்கு இவர் என்ன செய்வார்? மாமா பிணமாகிப் போய்விட்டார். அத்தையை நடைபிணமாக்கி விட்டார்களே என்று நம் சமூகத்தின் மீது கோபம் கோபமாக வந்தது.