

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘Court: State VS Nobody’ என்கிற தெலுங்குப் படத்தை அண்மையில் பார்த்தேன். ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் ‘போக்சோ’ சட்டத்தை மையப்படுத்தியது. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டால் குற்றவாளிகளுக்கு எதிரான மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கும் இந்தச் சட்டம், நடைமுறையில் குற்றமிழைக்காத இளைஞர்களையும் சிறார்களையும்கூடப் பாதிக்கக்கூடும் என்பதைத்தான் படம் பேசுகிறது.
பருவ வயதில் இருபாலினருக்கும் காதல் மலர்வது இயல்பே. அப்படிக் காதல் வயப்படுகிற சிறார்கள் வீட்டைவிட்டு வெளியேறுகிறபோதோ, 18 வயது நிறைவடைவதற்குள் திருமணம் புரிந்துகொள்ளும்போதோ ‘போக்சோ’ சட்டத்தின் பார்வையில் அது குற்றமாகக் கருதப்படுகிறது. 18 வயது நிரம்பாத பெண்ணும் ஆணும் காதல் செய்கையில் அந்தப் பெண் பாதிக்கப்பட்டவளாகவும் ஆண் குற்றவாளியாகவும் மாற்றப்படும் ஆபத்து இருப்பதைத்தான் படம் சுட்டிக்காட்டுகிறது. ஆணும் சிறார்தான் என்கிற நிலையில் அவனைக் குற்றவாளியாக்கிக் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்புவது சரிதானா என்பதும் இந்தப் படத்தைப் பார்த்தபோது தோன்றியது.