

இன்றைக்கு நமது இரண்டாவது உயிரைப் போல அலைந்துகொண்டிருப்பது நம்முடைய அலைபேசி. நம் நிழல் போல வரும் உயிர் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாமே தவிர, கைபேசி நம்மிடம் ஒரு நிமிடம் இல்லையென்றால்கூட நம் மனம் பதற்றப்பட்டுவிடுகிறது. நாம் பெற்ற குழந்தை தொலைந்துபோனது போலப் பதற்றத்தோடு அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருப்போம். அந்த கைபேசிதான் இன்று நம்முடைய பெரும்பாலான உறவுச் சிக்கல்களுக்கு மிக முக்கியமான காரணம் என்பதை ஒப்புக்கொண்டால்கூட, அது இல்லாமல் ஒரு நொடிகூட நம்மால் இயல்பாக இருக்க முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறோம்.
கட்டமைக்கப்படும் பிம்பம்: திருமணத்தை மீறிய உறவுகளுக்கு இந்த கைபேசிதான் முக்கியமான காரணமாக இருக்கிறது என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது வெறுமனே திருமணத்தை மீறிய உறவுகளுக்கு மட்டுமல்ல, மனதில் பொய்யான விஷயங்களைக் கட்டமைத்துக்கொள்வதற்கும் அதுவே வழிவகுக்கிறது. இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் இன்ஃப்ளுயன்சர்கள் (செல்வாக்குச் செலுத்துபவர்கள்) என்று சிலர் இருக்கிறார்கள். யாருடைய சமூக ஊடகப் பக்கங்களை அதிகமானோர் பின்தொடர்கிறார்களோ அவர்களை இன்ஃப்ளூயன்சர் என்று அழைக்கிறோம். அவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் நடப்பதுபோன்ற தோரணையுடன் சில சம்பவங்களையும் நடவடிக்கைகளையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு அதன் மூலமாகத் தங்கள் வருவாயைப் பெருக்கிக்கொள்கிறார்கள். அந்தச் சம்பவங்களை மிக மிக நுட்பமான, நுண்ணியக் காட்சியமைப்பின் மூலம் நம் மனதிற்குள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள்தான் சிறந்த கணவன் - மனைவி, தங்களுக்குப் பிரச்சினைகளே இல்லாத இரண்டு குழந்தைகள் என்பது போல அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சம்பவங்களைக் காட்ட காட்ட, நமக்கும் அந்த வாழ்க்கையின் மேல் மிகப்பெரிய ஏக்கம் ஏற்படுகிறது.