

வெளிநாட்டில் இருந்து வந்திருந்த தோழியைச் சந்தித்தபோது, “எங்கேயாவது பிச்சுக்கிட்டு ஓடணும்னு ரொம்ப நாளா தோனிட்டே இருந்துச்சு; இப்பதான் வாய்ச்சுச்சு” என்றாள். இரண்டு வார விடுமுறையில் அவள் தனியாக வந்திருந்தாள். அவளாகவே சிலவற்றைப் பகிர்ந்தாள். தாங்க முடியாத அளவுக்கு மூச்சு முட்டியதால், இந்த இடைவெளி என்பது புரிந்தது.
நாற்பதுகளில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்ரீதியான மாற்றங்கள், மனதை எளிதில் சோர்வுற வைக்கின்றன. வெள்ளெழுத்து, உடல் பருமன், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை இருபாலருக்கும் பொது என்றால், ஹார்மோன் சுரப்புக் குறைவு, மக்கர் செய்யும் மாதவிடாய் எனப் பெண்களுக்கான பிரத்யேக இம்சைகள் தனி. பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தனதாக்கிக்கொண்டு சிரமப்படும் பல பெண்களை அறிவேன். ஒன்று மட்டும் நன்கு தெரிகிறது. கணவன், மனைவி இருவருக்குமே தேவையான தனித்தனியான வெளியின் அளவு பெரிதாகி இருக்கிறது. அதை மதித்து நடப்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். எப்போதும் நெருங்கியே இருக்காமல், ஒரேடியாக விட்டு விலகியும் விடாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கான அளவீடுகள் தம்பதிகளுக்கு ஏற்பச் சற்று மாறுபடுகின்றன.