

எங்களுக்கு மிகவும் நெருக்கமான அவர் திருநெல்வேலியில் படித்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். புகுந்த வீடு தஞ்சை. அவருடைய கணவர், ‘ஷாப் கடை’ என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும் ‘ஜெனரல் மெர்ச்சன்ட்’ வியாபாரத்தை மிகச் சிறப்பாக நடத்திவந்தார். வீடும் நிலபுலனும் ஆள்படையும் நிரம்ப இருந்தன. அவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். காலப்போக்கில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு, கையில் இருந்த எல்லாவற்றையும் இழந்து வந்தாரை வாழவைக்கும் சென்னைக்குக் குடும்பத்துடன் அவர் இடம்பெயர்ந்தார். சென்னைக்குச் சென்றால்தான் தன் பிள்ளைகளுக்கு வாழ்வு என்கிற பெரிய முடிவைக் கையில் ஒன்றும் இல்லாமல் மன தைரியத்துடன் எடுத்தார்.
முதலில் மிரளவைத்த சென்னை படிப்படியாகப் பழகிப்போனது. அவர் தன் குழந்தைகளுக்குச் சொன்னதெல்லாம், ‘படித்து அவரவர் காலில் நிற்க வேண்டும்’ என்பதுதான். அவருடைய கணவர் கடும் உழைப்புக்கு அஞ்சாதவர். அவரும் பல வழிகளில் வியாபாரம் செய்து பணம் ஈட்டினார். இருப்பினும் யோசிக்காமல் செலவு செய்யும் நிலையில் இல்லை. அவர்களுடைய பிள்ளைகள் படித்து, வேலைக்குச் சென்றனர். நால்வருக்கும் திருமணம் ஆனது. காலம் உருண்டோடியது. பேரப்பிள்ளைகளையும் அவர் பேரன்போடு வளர்த்தார். நாளடைவில் அவரது ஆரோக்கியம் பாதிப்படைந்தது. அவரது இயல்பு வாழ்க்கை சிறிதுசிறிதாகச் சுருங்கி வீட்டுக்குள் அடைந்துபோனது.