

எழுத்துகளைக் கற்கத் தொடங்கிய நாளிலேயே வாசிப்பின் மேல் தணியாத காதல் வந்தது. எங்கள் அம்மாச்சி வீட்டில் வளர்ந்த காலத்தில் கடுகு, சீரகம் போன்றவை மடித்துவரும் செய்தித்தாளைச் சேகரித்து ஒன்று விடாமல் வாசித்து மகிழும் பழக்கம் தொற்றிக்கொண்டது. அது மனதில் விழுந்த வித்தாக, முளைத்துக் கிளைத்து இன்று ஆல்போல் தழைத்து நிற்கிறது. வாசிக்காத நாளெல்லாம் எனக்குச் சுவாசிக்காத நாளே!
எது கிடைக்கிறதோ அனைத்தையும் படிப்பேன் அம்புலிமாமா கதைகள், தெனாலிராமன் கதைகள், ராஜேஷ்குமாரின் பாக்கெட் நாவல் எனத் தொடங்கி இன்று சங்க இலக்கியம் உள்படப் பலவற்றையும் வாசித்து மகிழ்வதுடன், ஆன்மிக இலக்கியங்கள், வரலாற்றுப் புதினங்கள், பாரதியின் பரந்துபட்ட கவிவானத்தின் நட்சத்திரங்கள், எஸ்.ராமகிருஷ்ணன், இறையன்பு ஆகியோரது நூல்கள், இன்றைய புதுக்கவிதை நூல்கள் என அனைத்தையும் பசி கண்ட மனிதன் முன்பு உணவுக்குவியல் இருப்பதுபோல் படிப்பேன்.