

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவுக்கு ஆதரவாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 379 பேரும் எதிராக 137 பேரும் வாக்களித்தனர். பிரிட்டனில் 24 வாரக் கருவை இரண்டு மருத்துவர்கள் ஒப்புதலோடு கலைப்பதற்கு அனுமதி உண்டு. ‘24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பது குற்றம்; இதை மீறுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனைவரை விதிக்கப்படும்’ என்கிற சட்டம் விக்டோரியா மகாராணி காலத்தில் உருவாக்கப்பட்டது. காலத்துக்கு ஒவ்வாத இந்தச் சட்டத்தைத் திருத்தும் மசோதாவுக்கு ஆதரவாகக் கட்சி பேதமின்றிப் பலரும் வாக்களித்திருக்கிறார்கள்.
தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டோனியா அண்டோனியாஸி, “இந்தச் சட்டத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பலரும் குறைபாடுள்ள - குறைபிரசவ குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். மேலும் சிலர் தங்களது இணையரால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, அவரது வற்புறுத்தலின்பேரில் கருக்கலைப்புக்குத் தூண்டப்பட்டு வழக்கைச் சந்திக்கிறார்கள்.
இது போன்ற வழக்குகள் காலாவதியான சட்டத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கேலிக்கூத்துக்குச் சான்றுகள். இது சட்டமல்ல; முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய கொடூரம்” எனக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். குற்றவியல் தண்டனைச் சட்டத் திருத்த மசோதாவின் ஓர் அங்கம்தான் இந்தக் கருக்கலைப்பு மசோதா. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மேற்குலக நாடுகளிலும் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும்.