

முப்பது ஆண்டுகளுக்கு முன் கேரளத்திலிருந்து தடகள வீராங்கனைகள் பலர் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்தனர். அவர்களில் ஷைனி வில்சனும் ஒருவர். 1992-ல் பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவர் இவர்.
நிற்காத ஓட்டம்
கேரள மாநிலம் தொடுபுழாவில் பிறந்த ஷைனிக்குச் சிறு வயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம். அவர் ஏழாம் வகுப்பு படித்தபோது, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றிக் கோப்பையுடன் வீட்டுக்குத் திரும்பினார் ஷைனி. அதைப் பார்த்த அவருடைய பெற்றோர் பூரிப்படைந்தார்கள். உடனே ஷைனியைக் கோட்டயத்தில் உள்ள விளையாட்டுப் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.
கேரளத்தில் பல்வேறு விளையாட்டுப் பயிற்சி மையங்களில் ஷைனி பயிற்சி பெற்றுத் திறமையை வளர்த்தெடுத்தார். இவர் பயிற்சிபெற்ற அதே காலகட்டத்தில்தான் பி.டி. உஷா, வல்சம்மா போன்ற தடகள வீராங்கனைகளும் பயிற்சிபெற்றார்கள். பி.டி. உஷாவோடு சேர்ந்துதான் ஷைனியின் கால்களும் மைதானங்களில் ஓடத் தொடங்கின.
சர்வதேசக் கவனம்
பல்வேறு தேசியத் தடகளப் போட்டிகளில் பங்கேற்ற ஷைனி 1981-ல் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தேசிய தடகள சாம்பியனாக உருவெடுத்திருந்தார். அந்தப் பெருமையோடு 1982-ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனது பயணத்தை ஷைனி தொடங்கினார். 1984-ல் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி தடகளத்தில் அரையிறுதிவரை முன்னேறி கவனத்தை ஈர்த்தது. அந்தக் குழுவில் ஷைனியும் இடம்பெற்றிருந்தார்.
1985-ல் ஜகார்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி ஷைனியின் வாழ்க்கையில் மைல்கல். 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஷைனி தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல 400 மீட்டர் ஓட்டப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். ஷைனியின் ஆகச் சிறந்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது. தடகளத்தில் தொடர்ந்து முத்திரை பதித்துவந்த அவர், 1986-ல் சியோலில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அவரால் தகுதி பெற முடியாமல் போனது.
தடையில்லா வெற்றி
விளையாட்டில் முத்திரை பதித்துவந்த தருணத்திலேயே அவர் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். நீச்சல் வீரர் வில்சனை 1988-ல் கரம்பிடித்தார். இருவருமே விளையாட்டுத் துறையில் இருந்ததால் திருமண வாழ்க்கை ஷைனியின் தடகள வாழ்க்கைக்குத் தடையாக இல்லை. தொடர்ந்து பயிற்சிகளுக்குச் சென்றுவந்தார். திருமணமான ஓராண்டுக்குள்ளாகவே 1989-ல் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று மூன்று பதக்கங்களை ஷைனி கைப்பற்றினார்.
இதே போல 1990-ல் அவருக்குக் குழந்தை பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்த நிலையில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் அதைத் தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்று ஓடினார். இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால், குழந்தை பிறந்து மூன்றாவது மாதமே அவர் பயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்ததுதான். திருமணமோ குழந்தையோ உடல்நிலையோ அவரது தடகள வாழ்க்கையைக் கொஞ்சமும் அசைத்துப் பார்க்கவில்லை. குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால் அவரால் ஜொலிக்க முடிந்தது.
1992-ல் ஷைனியின் தடகள வாழ்க்கையில் பரவசமான நிகழ்வு அரங்கேறியது. அந்த ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு ஷைனிக்குக் கிடைத்தது. தடகள அணியின் கேப்டனாகத் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பைப் பெற்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பு ஷைனியின் வசமானது. 1995-ல் சென்னையில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இரண்டாவது குழந்தை பிறந்த சில மாதங்களில் இந்தப் போட்டியில் பங்கேற்றார்.
800 மீட்டர் தூரத்தை 1:59:85 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார். 1996-ல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிதான் அவர் பங்கேற்ற மிகப் பெரிய கடைசித் தொடர். அதே ஆண்டில் சென்னையில் நடந்த தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கையோடு தடகளப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ஷைனி.
15 ஆண்டுகள் நீடித்த அவரது தடகளப் பயணத்தில் 75-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கம் வெல்லாவிட்டாலும் ஆசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களைக் குவித்திருக்கிறார். ஷைனியின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் 1984-ல் மத்திய அரசு அர்ஜுனா விருதையும் 1998-ல் பத்மஸ்ரீவிருதையும் வழங்கிக் கவுரவித்தது.
தற்போது 53 வயதாகும் ஷைனி வில்சன், இந்திய உணவுக் கழக அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். கடினமான விளையாட்டுத் துறையில், பெண்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்த வெகுசிலரில் தடகள வீராங்கனை ஷைனி வில்சனுக்கும் இடமுண்டு.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in