

காங்கேயம் புத்தகத் திருவிழாவில் சிறப்புரையாற்றி விட்டு மேடையிலிருந்து இறங்கி வந்தேன். அப்போது என்னருகே வந்து கைகளைப் பிடித்துத் தோளில் சாய்ந்து அழுதார் ஒரு பெண்மணி. எனக்குக் காரணம் புரியவில்லை. அதன்பின் ‘அன்புக்காக நாலு சுவருக்குள் ஆடையிழந்தபோது, அதை அவமானமாகக் கருதவில்லை; எப்போது என் அன்பை நீ அவமதித்தாயோ அப்போது நான் ஒட்டுத் துணியின்றி இருப்பதைப் போன்ற அவமானத்தை அடைகிறேன்’ என்று ‘தூப்புக்காரி’ நாவலில் பூவரசி சொன்ன வார்த்தைக்காகவே இந்தக் கண்ணீரும் கைப்பிடித்தலும் என்பதை அவர் விளக்கினார்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான உடலில், பெண்ணுடல் மட்டும் எப்படி ‘ஆபாசம்’ என்கிற பொருளைப் பெற்றுவிடுகிறது என்று புரியவில்லை. கடந்த தலைமுறையினர் உடலைப் பொக்கிஷமாகப் பார்த்தார்கள், பேணினார்கள். ஆனால் இன்றோ பத்து வயது ஆண் பிள்ளைக்கும் பெண்ணின் உடல் பற்றித் தெரிகிறது. இது போலவே சிறுமிக்கும் ஆண் உடலின் ரகசியங்கள் தெரிகின்றன. நிர்வாணங்கள் மிகவும் மலிந்துபோன காலக்கட்டம் இது. ஆனாலும், இந்த நிர்வாணங்களின் மகிமையும் மகத்துவமும் உண்மையான அன்பில் மட்டுமே அழகாக இருக்கிறது; அர்த்தம் பெறுகிறது. எப்போது இந்த அன்பு கைநெகிழலாகவும் ஒருவருக்கு இன்னொருவர் காட்டிக்கொடுக்கும் துரோகமாகவும் மாறுகிறதோ அப்போதுதான் மனதில் அவமானத்தை அனுபவிக்கிறாள் பெண். தன் நம்பிக்கைக்குரிய காதல் தன்னை ஏமாற்றிவிட்டது என்கிற உணர்வே அவள் மனதை முழுவதுமாக நிர்வாணமாக்குகிறது.