

அந்தக் காலத்தில்.. என்று யாராவது பேசினாலே பலருக்கும் எரிச்சல் ஏற்படுகிறது. சில விஷயங்களில் அந்தக் காலம் போல் இருந்துவிட்டால் பிரச்சினை இருக்காது என்று தோன்றுகிறது. கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் சென்றாலும்கூட நம் துணைவர் யாருடன் பேசுகிறார், பணி செய்யும் இடத்தில் யாரெல்லாம் நண்பர்கள் என்று இருவரும் பெரிதாகக் கேட்டுக்கொண்டதில்லை. வீட்டிலும் பொதுவான விஷயங்களைத்தான் பேசுவார்கள். குறிப்பிட்ட இடைவெளி யுடன் ஒன்றுபட்ட மனதுடன் அவர்களால் இன்பமாக வாழ முடிந்தது.
ஆனால், இன்றைக்கு அடுக்குமாடிக் கட்டிடத்தில் மிக நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் புற உலகச் சூழலில் இருந்து முழுவதும் துண்டிக்கப்பட்டு அடைபட்ட அறைக்குள் கவனம் மொத்தமும் வாழ்க்கைத் துணை மீது குவிகிறது. இது உறவுச் சிக்கல்களை அதிகமாக்கி உள்ளது. சமூக ஊடகங்கள் எப்போதும் கண்காணிப்பு கேமரா வேலையைச் செய்கின்றன. வாட்ஸ் அப்பில் ‘ஆன்லைன்’ அடையாளம் நாம் இன்னும் தூங்கவில்லை என்பதையும் ஃபேஸ்புக் பகிர்வுகள் தோழமைகளுடனான நெருக்கத்தையும் காட்டிக் கொடுக்கின்றன. அதையொட்டிய வாழ்க்கைத் துணையின் கேள்விகள், சந்தேகமான கண்ணோட்டம், மனதின் முரண்கள், வேறு சிந்தனையற்று எப்போதும் சமூக ஊடகங்கள் வழியே தன் துணை பற்றிய ஆய்வாகவே பலருக்கும் நாள்கள் கழிகின்றன.