

நான் திருமணமாகி 1995இல் திருநெல்வேலிக்கு வந்தேன். அப்போது நானும் என் கணவரும் மட்டும் இருந்தோம். இப்போது மாதிரியெல்லாம் டிவி சேனல்கள், மொபைல், இணையதளம், வாட்ஸ் அப் என எதுவுமே கிடையாது. பொழுது போக்க எங்கள் வீட்டில் ரேடியோ மட்டுமே இருந்தது. அதில் வரும் நிகழ்ச்சிகள்தான் துணை. அந்த நேரத்தில் எனக்கு உற்ற நண்பர்களாக இருந்தவை புத்தகங்கள். என் கணவர் சிறு வயது முதல் நிறைய பத்திரிகைகளில் எழுதிவந்தார். கல்கி, தி.ஜானகிராமன், லட்சுமி, ரமணிசந்திரன் ஆகியோரது படைப்புகளோடு கிரைம் நாவல்கள், வார - மாத இதழ்கள் ஆகியவற்றை நிறைய வைத்திருந்தார். காலையில் அவர் வேலைக்குச் சென்றுவிட்டு மாலைதான் வீடு திரும்புவார். அதுவரை இந்தப் புத்தகங்களைப் படித்துத்தான் என் பொழுது கழியும். நிறைய படித்ததால் எனக்கு எழுத்து ஆர்வம் வந்தது. பல பத்திரிகைகளுக்குக் கதை, சமையல் குறிப்புகள், துணுக்குகள் எழுதவும் இந்தப் புத்தகங்கள் கைகொடுத்தன. அந்தக் காலம் இப்போது வருமா என நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. டிவி, மொபைல், சீரியல், ஒடிடி போன்றவை வாசிப்பைக் காணாமல்போக வைத்துவிட்டன.- ஆர்.பிரபா, சென்னை.
அன்புத் தோழிகளே, உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.