

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு முழுக்க முழுக்க ஞானசேகரன் மட்டுமே காரணம் என்று மே 28 அன்று சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டதுடன் 11 பிரிவுகளிலும் அவர் குற்றவாளி என அறிவித்திருக்கிறார். இந்த வழக்கில் நாளை (ஜூன் 2) தீர்ப்பு அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் நம் மனதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. என்றாலும், பாலியல் வழக்கு பதியப்பட்டு ஐந்து மாதங்களிலேயே முடிவடையும் நிலைக்கு வருவது என்பது மிக முக்கியமானது.
இதற்கு முன் வாச்சாத்தி பெண்கள், அத்தியூர் விஜயா, மதுரை ஊமச்சிகுளம் அங்கம்மாள் என ஏராளமான பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு நீதி கேட்டுப் பல வருடங்களாக நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வழக்காடியிருக்கிறார்கள். அது தரக்கூடிய அலுப்பைவிட வேறொன்றுதான் வேதனையானது என அத்தியூர் விஜயா என்னிடம் பகிர்ந்துகொண்டார். “எங்கள் மேல் ஒருமுறைதான் உடலளவில் பாலியல் வக்கிரம் அரங்கேற்றப்பட்டது. ஆனால், வழக்காடு மன்றங்களில் கேள்விகள் மூலம் எங்கள் மீது தினமும் பல்வேறு விதமாகப் பாலியல் துன்புறுத்தல் நிகழ்த்தப்படுகிறது” என்று அவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் பாலியல் குற்ற வழக்குகள் பல வருடங்கள் நீட்டிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பெண்களுக்குப் பெரும் மன அதிர்ச்சியைத் தருகின்றன. குற்றம் சுமத்தப்பட்டவர் அந்தக் கால இடைவேளையில் மெல்லமெல்ல நிரபராதி ஆகிவிடுறார்.