

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பெண் இன்று சார்பில் மே 25 அன்று திருப்பூர் காந்தி நகர் ஏ.வி.பி. அறக்கட்டளை பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்இ) நடைபெற்ற மகளிர் திருவிழாவைக் கோடை வெப்பத்தைத் தணிக்கும் குளிர் மழையாகக் கொண்டாடித் தீர்த்தனர் திருப்பூர் வாசகியர்!
திருப்பூர் மட்டுமன்றி கோவை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வாசகியரும் உரிமையோடு குடும்பவிழா போன்று பங்கேற்றனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் கே.ஆர். ஜெயந்தி பேசும்போது, “பதின் பருவப் பெண்களே ரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு இருக்கும் என்பதால், இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் அவசியம். கீரை, வெல்லம், பேரீச்சை உள்ளிட்டவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும். அரசு மருத்துவ மனைகள், துணை சுகாதார நிலையங்களில் கருப்பைவாய்ப் புற்று நோய், மார்பகப் புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலே கண்டறியக்கூடிய வசதிகள் வந்துவிட்டன. இதைப் பெண்கள் பயன்
படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.