

இன்று ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருமே கிட்டத்தட்ட ஒளிப்படக்காரரே. அவர்களில் ஒருவரான திண்டுக்கல்லைச் சேர்ந்த பானுப்ரியா தனித்துவத்தோடு செயல்படுகிறார். சாதாரண ஒளிப்படத்துக்கு அழகும் பொருளும் சேர்த்துப் பேசும் படமாக ஒளிப்படக் கலையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறார். கிராபிக்ஸ் சாப்ட்வேரைப் பயன்படுத்தி ஒளிப்படத்தில் ஓவியம் வரையும் டூடுல் போட்டோகிராபியில் இவர் சிறந்து விளங்குகிறார்.
மேகத்தில் ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கும் வீரர், குழந்தைக்குப் பாலூட்டும் அன்னை, பெண்ணின் உருவம் எனப் பல உருவங்களை வரைந்து கவனம் ஈர்க்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதை சொல்கிறது. காட்சிக்கு இன்பமாக மட்டுமே இந்த ஒளிப்படங்களைச் சுருக்குவதில்லை. சமூகப் பிரச்சினைகளையும் இவரது டூடுல் ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன.
“கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தபோது, அதில் போட்டோகிராபியும் ஒரு பாடம். அப்போதிருந்தே அந்தக் கலையில் அதிக ஆர்வம்” என்று சொல்லும் பானுப்ரியா, படிப்பு முடிந்த பிறகு, கிராபிக்ஸ் டிசைனராக நான்கு ஆண்டுகள் வேலை செய்தார். ஒளிப்படத்தில் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய நினைத்தவர், ‘டூடுல்’ கலையைக் கையிலெடுத்தார்.
“டூடுல் ஓவியங்களை பேஸ்புக்கில் பதிவிட்டேன். அவற்றுக்கு வரவேற்பும் பாராட்டும் கிடைத்ததால் தொடர்ந்து பதிவேற்றிவருகிறேன்” என்கிறார் பானுப்ரியா. தான் பயணிக்கும் வழியில் மனதுக்குப் பிடித்த காட்சிகள் தென்பட்டால் உடனே அவற்றைப் படமெடுத்துவிடுகிறார். பிறகு அவற்றில் பொருத்தமான டூடுல் ஓவியங்களை வரைகிறார்.
சரியான கருப்பொருள் கிடைத்தால் மட்டுமே படம் வரைகிறார். ஒரு படம் வரைந்து முடிக்கக் குறைந்தது ஐந்து மணி நேரமாவது ஆகும் என்கிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஒரு ஒளிப்படக் கண்காட்சியில் பங்கேற்றார். மாதம் முழுவதும் புதிய படங்களை வைக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமாக வரைந்து காட்சிப்படுத்தினார். கன்னியாகுமரி ஒக்கி புயல் பாதிப்பு, ஜல்லிக்கட்டு போன்றவை தொடர்பான ஒளிப்படங்கள் அதிக அளவில் கவனம் பெற்றதாக பானுப்ரியா குறிப்பிடுகிறார்.