

நான் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறேன். என்றாவது மன அமைதி இல்லாமலோ சிறிது ஓய்வு தேவைப்படுவதாக உணர்ந்தாலோ பாடப் புத்தகம் அல்லாத புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கிவிடுவேன். அந்தப் புத்தகத்தை முடித்து விடவேண்டும் என்று மும்முரமாகப் படிப்பேன்.
கல்கியின் பொன்னியின் செல்வனில் இருந்துதான் என் வாசிப்புப் பாதை தொடங்கியது. அனைத்துப் பகுதிகளையும் பள்ளி கோடை விடுமுறை, கல்லுாரிக் காலம், கல்லூரி முடித்தபின் என்று மூன்று வெவ்வேறு பருவங்களில் படித்திருக்கிறேன். இறுதிப் பகுதியை இரண்டாம் முறை, சாப்பிடும்போதுகூடப் புத்தகத்தை மூடாமல் ஒரே நாளில் முழு மூச்சாகப் படித்தது இன்றும் நினைவில் உள்ளது. அருள்மொழிவர்மன் கதாபாத்திரம் எண்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு வரியைப் படிக்கும்போதும் கதையில் வரும் காட்சிகள் கண்முன் நிகழ்வது போலத் தோன்றும். சிவகாமியின் சபதத்தின் இறுதி வரிகள் என் கண்களைக் கலங்கவைத்தன. கல்கி, சாண்டில்யன், சுஜாதா எழுதிய நூல்கள், வேள்பாரி, துப்பட்டா போடுங்க தோழி போன்றவை எனக்கு மிகவும் பிடித்தவை.