

கன்னட எழுத்தார் பானு முஷ்டாக், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார். ‘ஹார்ட் லேம்ப்’ (இதய விளக்கு) சிறுகதைத் தொகுப்புக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசை வெல்லும் முதல் கன்னட எழுத்தாளர் அவர். ‘ஹார்ட் லேம்ப்’ புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் தீபா பாஸ்தி. ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்ட அவரது முதல் புத்தகமும் இதுதான்.
பானு முஷ்டாக், 1948ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். செயற்பாட்டாளரான இவர் வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். 1970களில் கர்நாடகத்தில் தலித் இயக்கம், விவசாயிகள் இயக்கம், மொழி இயக்கம், பெண்களுக்கான போராட்டங்கள், சுற்றுச்சூழல் செயல்பாடு, நாடக இயக்கம் போன்றவை தன் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பானு முஷ்டாக் குறிப்பிடுகிறார். “விளிம்புநிலை மக்கள், பெண்கள், ஒடுக்கப்பட்டவர்களோடு நேரடியாகப் பழகியதுதான் எழுதுவதற்கான பலத்தை எனக்கு அளித்தது. கர்நாடகத்தின் அப்போதைய சமூக – அரசியல் செயல்பாடுகள் என்னை வடிவமைத்தன. என்னுடைய கதைகள் பெண்களை மையப்படுத்தியவை. மதமும் சமூகமும் அரசியலும் எதிர்த்துக் கேள்வி கேட்க வழியின்றிப் பெண்களை ஒடுக்குகின்றன. அப்படிச் செய்வதன் மூலம் அவர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக வைத்திருக்கின்றன. செய்தி ஊடகங்களில் வெளியாகும் நடப்புச் செய்திகளும் என் தனிப்பட்ட அனுபவங்களும் என் எழுத்துக்கான களத்தை வடிவமைத்தன” என்கிறார் பானு முஷ்டாக்.
1970 மற்றும் 1980களில் தென்னிந்தியாவின் முற்போக்கு இலக்கிய வட்டங்களுக்குள் பானு முஷ்டாக் எழுதத் தொடங்கினார். சாதி, வர்க்க அமைப்புக்கு எதிரான ‘பந்தாய சாகித்ய இயக்கம்’ (கிளர்ச்சி இலக்கியம்), தலித் மற்றும் இஸ்லாமிய எழுத்தாளர்களை உருவாக்கியது. அப்படி உருவான மிகச் சிலரில் பானுவும் ஒருவர். 1999இல் கர்நாடக சாகித்ய அகாடமி விருது, தான சிந்தாமணி அத்திமாப்பே விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தீபா பாஸ்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான ‘ஹசீனா மற்றும் பிற கதைகள்’ புத்தகத்துக்காக 2024 PEN விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவர் இதுவரை ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஒரு கவிதைத் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டிருக்கிறார். - சரண்யா, பயிற்சி இதழாளர்