

ஆறு வருடங்களாக ஒரு பாலியல் வழக்கு நிலுவையில் இருப்பது என்பதே குற்றச்சாட்டை முன்வைப்பவர்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி இருக்கக்கூடும். கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினிதேவியின் தீர்ப்பைக் கேட்கும் வரைக்கும் அவர்கள் அனைவருக்குமே நெஞ்சம் பதைபதைத்திருக்கும். பொள்ளாச்சி வீடியோவில் ஒலித்த, ‘அண்ணே என்ன விட்ருங்கண்ணே’ என்கிற அந்தக் குரல் நீண்ட காலமாக நம் சமூகத்தின் காதுகளில் ஒலித்தபடிதான் இருந்திருக்கும். அந்த வீடியோவைப் பார்க்க நேர்கையில் எல்லாம் நம் வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை நினைத்து ஒரு நிமிடம் கதி கலங்கி இருப்போம்.
பொதுவாகவே காதல் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத விஷயமாகவே இருக்கிறது. ஆணும் பெண்ணும் இயல்பாகப் பழகுவதைக் கூடச் சிலர் கொச்சைப்படுத்தும் வார்த்தைகளால் அடையாளப்படுத்துவதால், ரகசியமாக யாருக்கும் தெரியாமல்தான் ஓர் ஆணை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஒரு பெண்ணுக்கு நேர்கிறது. ஆனால், அப்படிப்பட்ட ஆண்களில் சிலர் தங்களுடைய இச்சையைத் தீர்த்துக்கொள்ள அந்தப் பெண்ணை எவ்வளவு தூரத்துக்குத் துன்புறுத்தி உபயோகித்துக்கொள்கிறான் என்பதைத்தான் இந்த பொள்ளாச்சி சம்பவமும் உணர்த்துகிறது.