

கிராமத்துவாசியான அம்மாவுக்கு வெளி உலகம் தெரியாது. பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே திருமணம் ஆகிவிட்டது. 20 வயதுக்குள் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டார். பிறரிடம் பேசத் தெரியாத குணம். ஆனால், இப்போது எம்.ஏ, எம்.ஃபில், பி.எட்., முடித்துள்ளார். நகரில் அவர் முக்கியமான ஒரு நபர். பொதுவான சமூகப் பிரச்சினைகளில் முன் நின்று தீர்வு காண்பார். மொத்தத்தில் பாரதி கண்ட புரட்சிப் பெண். இவ்வளவு மாற்றத்தையும் அம்மாவுக்குள் கொண்டு வந்தது டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியும் எழுத்தாளர்கள் அனுராதா ரமணன், சிவசங்கரியும்தான். அம்மாவுக்குப் போட்டியாக நான் இன்று முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். மேடைப் பேச்சில், வானொலியில், பட்டிமன்றங்களில் பங்கேற்றுவருகிறேன். இவை அனைத்துக்கும் மேற்சொன்ன எழுத்தாளர்களே முக்கியக் காரணம்.
என்னைத் தினமும் நினைக்க வைக்கிற ஒரு புத்தகம் எழுத்தாளர் நக்கீரன் எழுதிய ‘நீர் எழுத்து’. நான் தண்ணீரைச் சிக்கனமாக உபயோகிக்கக் காரணம் அந்தப் புத்தகம். புத்தகங்கள் மட்டுமே உலகை வேறு கண்ணோட்டத்தில் காணவைக்கின்றன. எனது ஆசிரியப் பணியில் புத்தக வாசிப்பு என்பது மிகவும் அவசியம். அதை ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களையும் புத்தக வாசிப்பிற்குள் நுழைய வைக்கிறேன். அதற்காக வீட்டில் சிறிய நூலகத்தையும் அமைத்திருக்கிறேன். மகிழ்ச்சியோடு வாழ புத்தகங்களே வழிநடத்துகின்றன. - ச. மதிப்பிரியா, மதுரை.