

தமிழகத்தில் 1973ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் மு. கருணாநிதி ஆட்சியில்தான் பெண் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். 22 பேருடன் அதாவது ஒரு துணை ஆய்வாளர், ஒரு தலைமை காவலர் மற்றும் 20 காவலர்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் படை தொடங்கப்பட்டது. தற்போது 27,000க்கும் அதிகமானோர் தமிழகப் பெண் காவல் படையில் உள்ளனர். இந்திய அளவில் இது மிகப் பெரிய எண்ணிக்கை. தற்போது தமிழகத்தில் 43% சட்டம் ஒழுங்குக் காவல் நிலையங்களில் பெண்கள் தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளனர்.
தமிழகக் காவல்துறையில் பெண்கள் அனைத்துப் பிரிவு களிலும் உள்ளனர். குற்ற விசாரணை, போக்குவரத்து மேலாண்மை முதல் உளவுத்துறை, சைபர் கிரைம், ரயில்வே காவல்துறை, முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் கமாண்டோ பிரிவுகள் வரை அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் உள்ளனர். 1989ஆம் ஆண்டு அரசு வேலைகளில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்க அன்றைய முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்தியதன் மூலம், துணை காவல் கண்காணிப்பாளர்களாகப் பெண்களை நேரடியாகத் தேர்வு செய்ய வழிவகுக்கப்பட்டது. அவர்களில் சிலர் காவல் துறைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளுக்கு உயர்ந்துள்ளனர். எனினும் இன்றும் காவல்துறையின் உயரிய பதவிகளில் பெண்கள் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனர். இது போன்ற உயர் பதவிகளில் பெண்களுக்கு அதிக அளவில் முன்னுரிமை அளிக்கப்படுவதே பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும். - செ. வில்சன், பயிற்சி இதழாளர்