

பெண்கள் தங்கள் விருப்பத்திற்குப் படிக்கவோ வேலை பார்க்கவோ திருமணம் செய்துகொள்வோ முழு சுதந்திரமும் உரிமையும் இருக்கிறதா என்றால், பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்த பெண் யாழினி. அவளுக்குத் தான் ஒரு நண்பர்போல இருப்பதாக வார்த்தைக்கு வார்த்தை அவளுடைய அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஆனால், அவள் என்ன படிக்க வேண்டும் என்று அவர்தான் தீர்மானித்தார். கல்லூரி வளாகத் தேர்வில் அவளுக்குப் பல்வேறு இடங்களில் இருந்து வாய்ப்புகள் வந்தபோது, அவள் எந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டும் என்பதையும் அவரே தீர்மானித்தார். ஆனால், அதை அவளுடைய விருப்பத்திற்குத் தக்க அவளே செய்வதுபோல மறுபடி மறுபடி சொல்லி, அவளுக்கே அதை ஊர்ஜிதப்படுத்தினார். அல்லது தனக்குத்தானே அவர் உறுதிப் படுத்திக்கொண்டார் என்றுகூட நான் நினைத்தது உண்டு.