மறுமணத்தை ஏற்கும் மனம் வேண்டும் | உரையாடும் மழைத்துளி 30
எனக்குத் தெரிந்த ஒரு பெண் சமீபத்தில் மறுமணம் செய்துகொண்டார். மறுமணத்துக்கு முன்பு வரை அவருடைய உறவினர்களும் நண்பர்களும், “அவ நல்ல பொண்ணு; பாவம் அவளுக்குக் கல்யாண வாழ்க்கை சரியா அமையல” என்றெல்லாம் பரிதாபப்பட்டு, அக்கறைப்பட்டு பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், விவாகரத்து ஆன ஒருவரை அந்தப் பெண் திருமணம் செய்துகொண்டார் என்று தெரிந்தவுடன் அவரைப் பற்றி மிக மோசமாக இகழ்ந்து பேசினார்கள். “இந்த வயசுல கல்யாணம் தேவையா? ஒரு வயசுக்கு அப்புறம் எல்லாத்தையும் அடக்கத் தெரியாதா?” என்றெல்லாம் அவரைக் கொச்சைப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சொற்கள் அந்தப் பெண்ணின் காதுகளுக்குச் சென்று அவரைக் காயப்படுத்திவிடக் கூடாது என நினைத்துக்கொண்டேன்.
அந்நியமாகும் உறவுகள்: திருமணமான பெண்கள் அந்தத் திருமண உறவில் இருந்து வெளியே வரும்போது சந்திக்கக்கூடிய நூறாயிரம் கேள்விகளுக்கான பதில்கள் இன்னும் இந்தச் சமூகத்தில் கண்டெடுக்கப்படவில்லை. பெண்களில் சிலர் தாங்கள் பிறந்த வீட்டிலேயே மிகவும் கேவலப்படுத்தப்பட்ட ஒரு நிலையில்தான் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு விவாகரத்து ஆகி பிறந்த வீட்டுக்கு வரக்கூடிய தங்களுடைய சகோதரி, குடும்ப வாழ்க்கைக்கு லாயக்கற்றவள் என்பதுபோல நேரடியான குற்றச்சாட்டுகளை அவர்களின் உடன் பிறந்தவர்களே வைக்கும் தருணங்களை நான் கண்டிருக்கிறேன். ஒரு பெண் திருமண உறவில் இருந்து விலகுவது என்பது அவளுடைய மனரீதியான பிரச்சினைகளை அதிகரித்துக்கொள்வதைப் போல ஆகிவிடுகிறது. திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டின் சொந்தங்கள் என்று தான் கருதிய உறவுகள் எல்லாம் கைவிட்டுப் போன பிறகு, தான் பிறந்து வளர்ந்த வீட்டிலும் தனக்கான எந்த வேரும் இல்லாமல் போகும் மனரீதியான அழுத்தம் அந்தப் பெண்களை வதைக்கும். இதைப் புரிந்துகொள்ளாமல் பல குடும்பங்கள் அந்தப் பெண்ணை ஒதுக்கி வைப்பதன் மூலமாக அவள் இன்னும் தன்னில் இருந்தே அந்நியப்பட்டுக் கொள்கிறாள்.
