

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அப்பாவை அவரது ஓய்வு நேரத்தில் புத்தகமும் கையுமாகத்தான் பார்த்திருக்கிறேன். அப்பா ஆசிரியர் என்பதால் பள்ளி செல்லும் நேரம் தவிர, மற்ற நேரத்திலும் விடுமுறை நாள்களிலும் உள்ளூர் நூலகத்திற்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்பாவின் அந்த வாசிப்புப் பழக்கமும் தமிழ்ப்பற்றும் எனக்கும் வந்துவிட்டன.
நான் படித்த பள்ளியில் அப்பா தலைமையாசிரியர் என்பதால் சிறுவர் கதைப்புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்து படிப்பேன். அப்பா தமிழாசிரியர் என்பதால் என்னையும் தமிழ் வழியில் படிக்க வைத்தார். நான் பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அப்பா நன்றாகக் கவிதை எழுதுவார். அப்பாவின் கவிதை அன்றைய நாளில் அமுதசுரபி தீபாவளி மலரில் வெளிவந்தது. அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற கல்கியின் ‘பீலிவளை’ என்னும் கதையும், கதைமாந்தரும் எனக்கு மிகவும் பிடிக்கும். அக்கதையை நான் மீண்டும் மீண்டும் வாசித்தேன். அது ஒரு அரசக் குடும்பத்தைப் பற்றிய கதை.