

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பசாமி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ.மாதவன். பள்ளியில் படித்தபோதே தன்னைப் பெண்ணாக உணர்ந்த அவர், தனது பெயரை சாதனா லட்சுமி என்று மாற்றிக்கொண்டார். முதலில் வீட்டில் எதிர்ப்பு இருந்த நிலையில், அவருடைய தாய் சாதனாவை ஏற்றுக்கொண்டார். தற்போது சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் இயன்முறை மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார் சாதனா.
“நீ தேர்ந்தெடுக்கும் புத்தகம் நாளை உன் நாற்காலியை நிர்ணயிக்கும் என்று எங்கோ படித்த வார்த்தை என்னுள், ‘அடுத்து என்ன?’ என்கிற கேள்வியை எழுப்பியது. அப்போது தான் கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் முத்துவேலின் நட்பு கிடைத்தது. என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தினார். அப்போது இருந்த சூழலில் நான் மனநல மருத்துவமனையில்தான் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்க வேண்டும். முத்துவேல்தான் என் வீட்டில் உள்ளவர்களிடமும் பேசினார். அதன் பின்னர் நான் திருநங்கைக்குரிய அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். என் அம்மா பாண்டிலட்சுமியும் என் சகோதரனும் எனக்கு உதவியாக இருந்தனர். திருநங்கை கிரேஸ் பானு எனக்கு இயன்முறை படிப்பு குறித்து எடுத்துச் சொல்லி, அதில் சேர்ந்து படிக்க அறிவுரை வழங்கினார். அதனை நான் முத்துவேலிடம் தெரிவித்தேன். அவரால்தான் இயன்முறை படிப்பில் சேர்ந்து ஓராண்டை நிறைவு செய்யப்போகிறேன்” என்றார் சாதனா லட்சுமி.