முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி | பெண்கள் 360

முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி | பெண்கள் 360
Updated on
2 min read

பெண்களுக்கு வாய்ப்பு அளிப்போம்: அண்மையில் வெளியான இந்திய நீதித் துறை ஆய்வறிக்கை 2025இன்படி 20.3 லட்சம் பேர் பணியாற்றும் இந்தியக் காவல் படையில் காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் பொறுப்பு வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவு. காவல்துறையில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் பணியிடங்கள் நாட்டின் எந்தவொரு மாநிலத்திலும் மத்திய ஆட்சிப் பகுதியிலும் முழுமையாக நிரப்பப்படவில்லை. ஆந்திர மாநிலத்திலும் பிஹாரிலும் தோராயமாக இன்னும் மூன்று ஆண்டுகளில் காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக உயரும் சாத்தியம் உள்ளது. ஆனால், பல மாநிலங்களில் இதற்குப் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும். ஜார்க்கண்ட், திரிபுரா, அந்தமான் நிகோபார் தீவுகளில் பெண்கள் இந்த இலக்கை எட்ட கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும். நீதித் துறையிலும் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. மாவட்ட நீதிபதிகளில் 38 சதவீதத்தினர் பெண்கள். உயர் நீதிமன்றங்களில் 14 சதவீதமாகவும் உச்ச நீதிமன்றத்தில் 6 சதவீதமாகவும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. உயர் நீதிமன்றங்களில் தெலங்கானா, சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 33%ஐ எட்டியிருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதைவிடக் குறைவு. காவல் துறையிலும் நீதித் துறையிலும் பெண்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் இந்த ஆய்வறிக்கை உணர்த்துகிறது.

முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி:டாடா சன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தலைமை டிஜிட்டல் அதிகாரியான ஆர்த்தி சுப்பிரமணியன், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்க இருக்கிறார். இதன்மூலம் இந்த நிறுவனத்தின் முதல் பெண் தலைமைச் செயல் அதிகாரி என்கிற பெருமையை ஆர்த்தி பெறுகிறார். பல ஆண்டுகளாக ஆண்களின் கரங்களே ஓங்கியிருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் அண்மைக் காலமாகப் பெண்கள் பல்வேறு தடைகளைத் தாண்டித் தலைமைப் பொறுப்பை வகித்துவருகின்றனர். 2024 நிலவரப்படி 25 சதவீதப் பெண்களே தகவல் தொழில்நுட்பத் துறையில் தலைமைப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அந்த வகையில் ஆர்த்தியின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்தது. டாடா நிறுவனத்தில் 1989இல் பயிற்சியாளராக ஆர்த்தி இணைந்தார். தன் திறமையால் அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்ந்தார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு எளிதில் தீர்வு காணும் ஆர்த்தியை அவரது அலுவலகத்தில் ‘Ms.Fixit’ என்று அழைப்பார்களாம். அமெரிக்கா, கனடா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் பணிபுரிந்ததால் பெருநிறுவனங்களை நிர்வகிக்கும் அனுபவத்தைப் பெற்றார். டிஜிட்டல் தொழில்நுட்பத்திலும் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in