‘இந்து தமிழ் திசை’ நாளிதழின், ‘பெண் இன்று’ சார்பில் கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 23 அன்று ‘மகளிர் திருவிழா’ நடைபெற்றது. இதில் ஏராளமான வாசகியர் கலந்துகொண்டு அந்த நாளைச் சிறப்பாக்கினர்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மகளிர் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேசும்போது, “கர்ப்ப காலத்தில் பெண்கள் தொடர் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் வரும் காய்ச்சலை அலட்சியப்படுத்தக் கூடாது. மாதவிடாய் நின்று சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தால் அது கருப்பை புற்றுநோய் அல்லது கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மார்ப்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் அவசியம். மார்பில் சிறிய மாற்றம், சிறிய கட்டி இருத்தல், தோலில் மாற்றம், காம்பில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் குடும்பத்துக்கு நீங்கள் முக்கியம். நம் உடல்நலனுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்..தொழில்முனைவோர் டி.பி.சிவசங்கரி பேசும்போது, “எம்.டெக். படித்த நான் அதற்குத் தொடர்பே இல்லாத மோட்டார் தயாரிப்புத் துறையில் நுழைந்தேன். ஆரம்பத்தில் நிறைய அவமானங்கள், பிரச்சினைகளைச் சந்தித்தேன். இரவு, பகல் பார்க்காமல் மோட்டார் தயாரிப்பு முறையைக் கற்றேன். அதன் பின்னர் பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனங்களாக மாற்றும் நிறுவனத்தைத் தொடங்கினேன். பெண்கள் எந்தவொரு விஷயத்தையுமே முதலில் எடுத்துச் செய்யும்போது தயக்கம் காட்டக் கூடாது. நிறைய பிரச்சினைகள், எதிர்ப்புகள் வந்தாலும் முடங்கிவிடக் கூடாது. நமக்கான சவால்கள் அதிகம் இருந்தாலும், எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்” என்றார். கோவை கோபனாரியைச் சேர்ந்த வழக்கறிஞர் காளியம்மாளுக்கு உஜாலா ‘லிக்விட் டிடர்ஜென்ட்’ நிறுவனத்தின் ‘வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ்’ விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டன.போட்டிகளில் கலக்கிய வாசகியர்.கோவை மகளிர் திருவிழாவில் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்துவதுபோல் அமைந்தது கோவை சந்துருவின் கலை நிகழ்ச்சி. இரண்டு மனிதர்கள் பேசி, பாடி, ஆடுவது போல் பொம்மை முகத்தை வைத்துக்கொண்டு அவர் ஆடியதும், இரண்டு மனிதர்கள் நடனமாடுவது போல் நான்கு கால் நடனம் ஆடியதும் வாசகியரைக் கவர்ந்தது. வாசகியருக்கு நடத்திய பலூன் உடைத்தல், பலூன் ஊதுதல், கயிறு இழுத்தல், பாட்டுக்குப் பாட்டு, கேள்விகளுக்குப் பதில், மனதுக்குப் பிடித்த பாடல்கள் எனப் பல்வேறு போட்டிகளில் அனைத்து வயதினரும் போட்டி போட்டுக்கொண்டு பங்கேற்று உடனுக்குடன் பரிசுகளைப் பெற்றனர்.விழாவின் மற்றொரு சிறப்பம்சம், ‘ஃபேஷன் ஷோ’. இதில் வாசகியர் தாங்கள் பெண்ணாகப் பிறந்ததை நினைத்து ஏன் பெருமைப்படுகிறோம் எனப் பேசினர். மேடையில் ஒய்யாரமாக ‘ரேம்ப் வாக்’ செய்து அரங்கை அதிரச் செய்தனர். சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா கலகலப்புடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இவ்விழாவில், வாசகியர்கள் ரபியா பீவி, லலிதா மணி ஆகியோருக்கு பம்பர் பரிசு வழங்கப்பட்டது. வாசகியரின் ஆராவார நடனத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது..கோவை மகளிர் திருவிழாவை, உஜாலா நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ்திசை’ நடத்தியது. பிரெஸ்டா வுமன்ஸ் வியர், பிஎஸ்ஆர் சில்க்ஸ் சாரீஸ், நலம் ஃபுட்ஸ், பொன்மணி வெட்கிரைண்டர்ஸ், விஸ்ருதா வெள்ளிப் பொருள்கள், கோபுரம் மஞ்சள்தூள் & குங்குமம், அரோமா ப்ரிமியம் டெய்ரி புராடெக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன.