புறக்கணிக்கப்படும் பெண்கள் | உரையாடும் மழைத்துளி - 23
தமிழகம் முழுக்க புத்தகக் காட்சி ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. புத்தகக் காட்சிகளில் தொடர்ந்து பேசும் பேச்சாளர்கள் குறித்தும், தொடர்ந்து சிலர் மட்டுமே அழைக்கப்படுவது குறித்தும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. புத்தகக் காட்சிக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்தும் செலவிடப்பட்டும் தொகை குறித்தும் வெளிப்படைத்தன்மை இல்லை என்கிற விவாதத்தையும் பார்க்க முடிகிறது. 2023-24 தமிழக பட்ஜெட்டில் புத்தகச் சந்தைக்கென 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒவ்வொரு விதமான சன்மானம் எனும் விதத்தில் பேதங்கள் தொடங்குகின்றன.
எல்லா எழுத்தாளர்களும் நல்ல பேச்சாளர்கள் இல்லை என்கிறார்கள். எல்லாப் பேச்சாளர்களும் நல்ல எழுத்தாளர்கள் இல்லையே. இசை குறித்த பட்டிமன்றம் நடக்கும்போது அங்கு இருக்கக்கூடிய பட்டிமன்ற பேச்சாளர்கள்தான் பாடல்களைப் பாடுவார்கள். அதற்காக சினிமா பாடகர்களை அழைத்து வந்து அங்கு பாட வைப்பது இல்லை. சில எழுத்தாளர்கள் நன்றாகப் பேசக்கூடியவர்களாக இல்லாவிட்டால்கூட, அவர்கள் சொல்லும் கருத்து மிக முக்கியமானதாக, சமூகத்திற்குத் தேவையான ஒன்றாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும்போது அவர்களோடு திறமையாகப் பேசக்கூடிய எழுத்தாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.
