

எனக்கு வயது 76. என் கணவர் கடல் நாகராஜனுக்கு வயது 82. எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் புத்தகங்களின் குவியல் இருக்கும். ‘வாசிப்பை நேசிப்போம்’ என்பதுதான் நாங்கள் உச்சரிக்கும் மந்திரம். எங்கள் வீட்டு மாடியில் ஓர் அறையை ‘கலாம் நினைவு நூலக’மாக மாற்றி வைத்துள்ளோம். இதில் சுமார் 2,000 நூல்கள் உள்ளன. பிரபலங்கள் எழுதிய கடிதங்களும் உள்ளன. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை தன் கைப்பட எங்கள் கடலூர் நண்பருக்கு 70 ஆண்டுகள் முன்பு 1955இல் எழுதிய கடிதமும் அதில் அடக்கம்.
நாம் வீடு கட்டும்போதும், வாங்கும்போதும் எத்தனை படுக்கை அறைகள் உள்ளன என்றுதான் கவனிக்கிறோம். பூஜை அறை இருக்கிறதா என்று அக்கறையோடு பார்க்கிறோம். ஆனால், நம் குடும்பத்திற்கு ஒரு நூலக அறையாவது வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நாம் யாருமே சிந்திப்பது இல்லை.விடுதலைப் போராட்ட வீரமங்கை மு.அஞ்சலை அம்மாள் எங்கள் உறவினர். நெசவாளியாக இருந்த அவரை விடுதலைப் போராளியாக மாற்றியவர் அவர் கணவர் முருகைய்யன். இவர் அந்தக் காலத்தில் (1940-1950) செய்தித்தாள் முகவராக இருந்தவர். தினமும் அன்றைய நாட்டு நடப்புகளையும் காந்தி நடத்தும் போராட்டம் பற்றியும் தன் மனைவிக்குப் படித்துக் காட்டினார். அத்துடன் வீட்டில் தனியாக ஆசிரியர் வைத்து எழுத, படிக்கக் கற்றுக்கொடுத்ததோடு காந்தியைச் சந்திக்க வைத்தார். தன் குடும்பம் முழுவதையும் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செய்து பல ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றார். காந்தியே வியந்து அஞ்சலை அம்மாளை ‘தென்னாட்டு ஜான்சி ராணி’ என்று பாராட்டினார். அது மட்டுமன்றி அவரைக் கடலூர் தொகுதிக்கு இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக மக்கள் தேர்ந்தெடுத்து மக்கள் பணி செய்ய வைத்தார்கள்.
இப்போது தமிழக அரசு அவரது சேவையைப் பாராட்டி கடலூர் துறைமுக நகரில் அவர் அடிக்கடி விடுதலைப் போராட்டங்களை நடத்திய காந்தி பூங்காவில் முழு உருவச்சிலை வைத்து, அருகிலேயே அவர் குடும்பத்தினருடன் சிறை சென்ற விவரங்களைப் பெயர்களோடு கல்வெட்டில் செதுக்கி வைத்திருக்கிறது. இந்த மாபெரும் பயணத்தின் தொடக்கம் அஞ்சலையம்மாளின் வாசிப்புதான். ‘நாம் புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசிக்கின்றோம்; ஆனால், அவை நம்மைக் கீழிருந்து மேலே கொண்டு செல்கின்றன’ என்று அம்பேத்கர் அன்று சொன்ன அருமையான வாசகம் முற்றிலும் உண்மை தானே.
- மாலதி நாகராஜன்,
ஆல்பேட்டை, கடலூர்.