

நகரப் பகுதி மக்களுக்குக் கிடைப்பதுபோல் கல்வி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கிராமப்புறப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கிடைப் பதில்லை. கிராமப்புறப் பகுதிகளிலேயே இந்நிலை என்றால் குக்கிராம, மலைவாழ் மக்களின் சிரமங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஒவ்வொரு தேவையைப் பூர்த்திசெய்வதும் அவர்களுக்குக் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில், குக்கிராமத்தில் பிறந்து, தடைகளைக் கடந்து இன்று தமிழ்நாடு அளவில் இருளர் பழங்குடியினத்தில் முதல் பெண் வழக்கறிஞர் என்கிற நிலையை அடைந்துள்ளார் வழக்கறிஞர் எம்.காளியம்மாள்.
கோவை, காரமடை அருகே தோலம் பாளையத்தை அடுத்துள்ள கோபனாரி பழங் குடியினக் கிராமத்தில் பிறந்தவர் காளியம்மாள். வீட்டுக்கு ஒரே மகள். இவர்களது கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. “பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மருத்துவம் ஆகிய மூன்றும் எங்களுக்குச் சாதாரணமாகக் கிடைத்துவிடாது. தடைகளைத் தாண்டியே பெற வேண்டும். என்னை நன்றாகப் படிக்க வைக்க என் பெற்றோர் நினைத்தாலும், அதற்கான வசதி அவர்களிடம் இல்லை. தந்தை கூலித் தொழிலாளி. தாய் கால்நடை வளர்க்கிறார். வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோபனாரி அரசுத் தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, 10 கிலோ மீட்டர் தொலைவில், ஆனைக்கட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தேன்” என்று சொல்லும் காளியம்மாள், ஆற்றைக் கடந்துதான் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.