

என் பெயர் பத்மா. நான் சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், தென்னங்குடி பாளையம் ஊராட்சியில் வசித்துவருகிறேன். 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன். அதே ஊராட்சியில் பாக்குமட்டை தயாரிக்கும் தொழில்கூடத்தில் தினக் கூலியாகப் பணியாற்றிவந்தேன். இந்நிலையில் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் ‘மதி சிறகுகள்’ தொழில் மையம் குறித்து அறிந்தேன்.
அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கிவரும் ‘மதி சிறகுகள்’ தொழில் மையத்தை அணுகினேன். அங்குள்ள அலு வலர்கள் எனது வேலை தொடர்பான முன் அனுபவத்தைக் கேட்டறிந்தனர்.
‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இணை மானியத் திட்ட நிதி குறித்து எடுத்துரைத்தனர். நான் மகாலட்சுமி மகளிர் சுயநிதிக் குழுவில் உறுப்பினராக உள்ளேன். குழு உறுப்பினர்களாக இருந்தால் அவர்களுக்கு 30 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும் என்பதை அறிந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து ‘மதி சிறகுகள்’ தொழில் மையத்தின் மூலம் தொழிலுக்குத் தேவையான உதயம் சான்றிதழ், தொழில் திட்டம் ஆகியவை போடப்பட்டு பாக்குமட்டைத் தயாரிக்கும் இயந்திரம் வாங்குவதற்கு ஆத்தூர் இந்தியன் வங்கியின் மூலம் கடன் உதவியாக ரூபாய் 4 லட்சத்து 20 ஆயிரம் கிடைத்தது. இதில் 30% மானியமாக ரூபாய் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பெறப்பட்டது.
கூலித் தொழிலுக்குச் சென்று வந்த நான் தற்போது எனது சொந்த ஊராட்சியிலேயே பெண் தொழில் முனைவோராக உயர்ந்து மாதம் 25 ஆயிரம் வரை லாபம் பெற்றுவருகிறேன். என் நிறுவனத்தில் இரண்டு பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளேன். இதனால் என் வாழ்வாதாரத்தோடு என் பகுதியைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமுதாயப் பண்ணைப் பள்ளி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் அய்யம் பாளையம் ஊராட்சியில் 60 நபர்களைக் கொண்டு உழவர் உற்பத்தியாளர் குழு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழுவிற்கு ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் ரூ.75,000 துவக்க நிதியாகப் பெறப்பட்டது. இந்த நிதியைப் பயன்படுத்தி கறவை மாடுகளுக்குப் புல் அறுக்கும் இயந்திரம் வாங்கப்பட்டு, இந்த இயந்திரங்களைத் தேவைப்படும் நபர்கள் சுழற்சி முறையில் எடுத்துச் சென்று பயன்பெற்று வருகின்றனர். மேலும், உழவர் உற்பத்தியாளர் குழுவில் இணையாத நபர்களுக்கும் மிகக் குறைந்த விலையில் வாடகைக்குக் கொடுத்து இதுவரை ரூ.15,000 ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குழுவில் உள்ள 30 நபர்களுக்கு நிலக்கடலை சமுதாயப் பண்ணைப் பள்ளி பயிற்சி நடத்தத் தொழில் திட்டம் தயாரித்து அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் நிலக்கடலை சமுதாயப் பண்ணைப் பள்ளி உற்பத்தியாளர்களுக்கு ரூ.64,000 நிதி பெறப்பட்டது. இந்த நிதியைப் பயன்படுத்தி சிறந்த முறையில் நிலக்கடலை சமுதாயப் பண்ணைப் பள்ளி 16 பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் கடந்த ஆண்டு வரை மாட்டுத் தீவனத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட நிலக்கடலை தற்போது தீவனத்திற்குப் போக மீதமுள்ளவற்றைத் தானியங்களாகப் பிரித்தெடுத்து சில அலகுகளை விற்பனைக்காகவும் சில அலகுகளை அடுத்த பருவத்திற்கு விதைக்கவும் சேமித்து வைக்கின்றனர். இந்தப் பயிற்சியை வழங்கிய ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்திற்கும் மாவட்ட அலுவலகம் மற்றும் வட்டார அலுவலகத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330