

நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது அந்தப் பள்ளியில் என் அப்பா எட்டாம் வகுப்பு ஆசிரியர். அதனால், பள்ளி நூலகத்திலிருந்து காந்தியின் ‘நவகாளி யாத்திரை’, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ ஆகிய அரிய புத்தகங்களைக் கொண்டுவந்து தந்தார். அந்தக் காலத்தில் என் வீட்டில் ‘சுதேசமித்திரன்’ நாளிதழை வாங்கினார்கள். எங்கள் பக்கத்து ஊரான வேதாரண்யம் அல்லது திருத்துறைப்பூண்டிக்குச் சென்று கல்கி, ஆனந்த விகடன், குமுதம் இவற்றோடு பாக்கெட் நாவல்கூட வாங்கியிருக்கிறேன்.
அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, கீதா பென்னட் ஆகியோரின் கதைகளோடு ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திரகுமார், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய பாக்கெட் நாவல்களும் பிடிக்கும்.
இவ்வளவுக்கும் நான் நிறைய படிக்கவில்லை. ஐந்தாம் வகுப்போடு என் படிப்புக்கு முழுக்குப்போடச் சொல்லிவிட்டார் என் அப்பா. ஆனால், மளிகைப் பொருள்கள் பொட்டலம் கட்டிவரும் தாளைக்கூட விடாமல் படித்துவிடுவேன். இந்த 66 வயதிலும் வாசிப்பை விடாமல் தொடர்கிறேன். எனக்கு ஒரு கண்ணில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அப்போது கண்ணில் போடும் ஊசி வலிக்குமா, இரண்டாம் நாளில் இருந்து புத்தகம் படிக்கலாமா என்கிற இரண்டு கேள்விகளைத்தான் மருத்துவரிடம் கேட்டேன். என்னிடம் இரண்டு கண்ணாடிகள் இருக்கின்றன. மாற்றி மாற்றித் தண்ணீர் போட்டு துடைத்துவிட்டுப் படிப்பேன்.
தினமும் இரவு ஒன்பது மணிக்குத்தான் என் கணவர் செய்தித்தாளைக் கொண்டுவந்து தருவார். அவருக்கு இரவு உணவை எடுத்துவைத்துவிட்டுச் செய்தித்தாளைப் படிப்பேன். அப்போதுதான் அந்த நாள் அர்த்தம் நிறைந்ததாகத் தோன்றும். பத்து ஆண்டுகளாக இந்தப் பழக்கம் தொடர்கிறது.
- எஸ். விஜயலெட்சுமி,
வாய்மேடு மேற்கு, வேதாரண்யம்.