

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் பொம்மைகள் என்றால் தனி பிரியம்தான். இன்னும் சிலர் ‘நானும் ஒரு பொம்மையாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்’ என ஆசைப்படுவார்கள். அப்படி யோசிப்பவர்களின் ஆசையை நிஜமாக்குகிறார் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த அமுதா ராஜன். இவர் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவரும் நகல் பொம்மைகளை (Replica doll’s) செய்வதில் வல்லவர். ஒரு நபரின் ஒளிப்படத்தைப் பார்த்து அதில் இருப்பதுபோல் அச்சு அசலாக அவர்களின் உருவத்தைப் பொம்மையாக வடிவமைத்துவிடுகிறார் அமுதா.
“சின்ன வயசுல இருந்தே ஓவியம் வரைவதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆரம்பத்தில் சுயமாக ஓவியங்களை வரையத் தொடங்கினேன். ஆனா வேலைக்குப் போன பிறகு ஓவியம் வரைவதில் அவ்வளவாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பிறகு குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டேன். குழந்தையுடன் இருக்கும் நேரம் போக மீதமுள்ள நேரத்தைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதற்காக மீண்டும் ஓவியம் வரைவதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்” என்கிறார் அவர்.
பதினைந்து வருடங்களாக ஓவியத் துறையில் ஈடுபட்டுவரும் அமுதா கேரளச் சுவர் ஓவியம், ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர், தஞ்சாவூர் ஓவியம், ஏர் கிளே (பிரத்யேகக் களிமண்) கொண்டு பிரதிபலிக்கும் பொம்மைகள் போன்றவற்றை உருவாக்குவதில் வல்லவராக உள்ளார். ஓவியத் துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களிடம் பல்வேறு ஓவிய முறைகளை அமுதா கற்றுக்கொண்டுள்ளார்.
சிறிய வடிவில் செய்யப்படும் பழங்கள், துரித உணவில் கொடுக்கப்பட்டுள்ள வண்ணங்கள், வடிவங்கள் அசல்போல் உள்ளன. அதேபோல் பிரதிபலிக்கும் பொம்மைகளுக்கு ஒளிப்படத்தில் இருப்பது போன்ற உடை, சிகை அலங்காரம், நகை, காலணி ஆகியவற்றைப் பார்க்கும்போது இவை அனைத்தும் களிமண்ணால் செய்தவையா என்ற சந்தேகம் தோன்றுகிறது. “ஒருநாள் என் தோழி முதன்முதலில் நகல் பொம்மையைச் செய்து தரச் சொன்னாள். அதுவரை நகல் பொம்மையைச் செய்து பார்க்காத எனக்கு, அது புதிய அனுபவமாக இருந்தது. ஆனால், சாதாரணப் பொம்மைகளைச் செய்த அனுபவத்தால் நகல் பொம்மைகளைச் செய்வது கொஞ்சம் எளிமையாக இருந்தது.
என் முதல் முயற்சிக்கு பாராட்டு கிடைத்தது. தற்போது இதை ஆர்டர் எடுத்துப் பலருக்குச் செய்துகொடுத்துவருகிறேன். ஓவியத் துறையில் விருப்பம் உள்ளவர்களுக்கு வகுப்பு எடுக்கிறேன்” என்கிறார் அவர்.