

சமீப காலமாகச் சமூக ஊடகங்களில் நான் அதிகமாகப் பார்ப்பது வெறுப்புணர்வு மட்டுமே.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கை முறையை வீடியோவாகப் பதிவு செய்தால் அதற்கும்கூட மிக ஆபாசமான பதிலுரைகளை நிறையப் பேர் பதிவிடுகின்றனர். எதனால் இவ்வளவு வன்மம், இவ்வளவு பழியுணர்வு எனச் சத்தியமாகப் புரியவில்லை. இதைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே சமூக ஊடகங்களில் பாலியல் வக்கிரங்களைப் பகிர்ந்துகொண்டதற்காக நால்வர் மீது போக்சோ சட்டம் பாய்ந்திருக்கிறது. ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அவர்களைப் பற்றி நான் அறிய ஆரம்பித்தேன்.
சமூக வலைதளங்களில் ‘கன்டென்ட்’ என்கிற வார்த்தை அதிகமாகப் பிரயோகிக்கப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம், இல்லாத ஒன்றை இருப்பதுபோல உருவாக்கிப் பேசுகிறார்கள்; அது ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல மக்களுக்குத் தோன்றுவதால் தொடர்ந்து அதைப் பார்க்கிறார்கள். அவர்களின் ‘கன்டென்ட்’ என்னவாக இருக்கிறது என்பதே பெரும் கேள்வியாக இருக்கிறது. அவர்கள் பெரும்பாலும் குடும்பச் சண்டைகளையும் பாலியல் வக்கிரங்களையும் அதில் இணைத்துப் பேசுகிறார்கள். லைக்ஸ் மூலமாகவும் அவர்களைப் பின்தொடர்பவர்கள் மூலமாகவும் அவர்களுடைய மாதாந்திர வருமானம் அதிகரிக்கிறது.