ரயில் பயணங்களில்... | என் பாதையில்

ரயில் பயணங்களில்... | என் பாதையில்
Updated on
1 min read

மின்சார ரயிலில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். பெண்கள் பெட்டியில் எனக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் பேசியபடி வந்தனர். இருவரில் இளையவராகத் தெரிந்த பெண் தன் கணவரைப் பற்றித்தான் பேசுகிறார் என்பது புரிந்தது. அந்தப் பெண்ணின் கணவர் யாரோ ஒருவருடன் அவரைத் தொடர்புபடுத்திப் பேசுவார்போல. “அக்கா இன்னைக்கும் அவரு வாய்க்கு வந்தபடி பேசிக்கிட்டே இருந்தார். சரி, காலையில அவர்கூட சண்டைபோட்டுக்கிட்டு இருந்தா கம்பெனிக்கு நேரமாகிடும்னு நான் வாயே திறக்கலை. குழந்தையை ரெடி பண்ணி பால்வாடில விட்டுட்டு அவசரமா கிளம்பினேன்” என்று சொல்லும்போதே அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் குளம்கட்டி நின்றது.

நான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட, இறங்கினேன். நடைமேடையில் எனக்கு முன்னால் நடந்துசென்ற பெண் போனில் யாருடனோ பேசியபடி நடந்தார். “நான் எந்த ஸ்டேஷன்ல எப்ப டிரெயின் ஏறினேன்னு உங்கிட்ட சொல்லிட்டேன். இப்பதான் இறங்கினேன். நான் டிரெயின்லதான் இருந்தேனான்னு டைம் பார்த்து நீயே தெரிஞ்சுக்கோ. இதுக்கு மேல உனக்கு விளக்கம் சொல்ல முடியாது. எனக்கு ஆபீஸுக்கு நேரமாச்சு” என்றபடியே அழைப்பைத் துண்டித்துவிட்டு வேகமாக நடந்தார். இந்தப் பெண்கள் எப்போதும் தங்களை அடுத்தவருக்கு நிரூபித்தபடிதான் வாழவேண்டியிருக்கிறது என்பதை நினைக்கையில் மனம் கனத்துப்போனது. யாருக்கோ நடக்கும் துயரம் எனக்கே நேர்ந்ததுபோல் இருந்தது. இதிலிருந்து பெண்களுக்கு எப்போதுதான் விடுதலையோ?

- சித்ரா, திருநின்றவூர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in