போகிற போக்கில்: மாற்றத்துக்கு வித்திடும்‘க்ளிக்’

போகிற போக்கில்: மாற்றத்துக்கு வித்திடும்‘க்ளிக்’
Updated on
3 min read

நாளைய வரலாறான இன்றைய நிகழ்வுகளைப் படம்பிடிப்பதில் சிந்துஜாவுக்கு விருப்பம் அதிகம். சுயாதீன ஒளிப்படப் பத்திரிகையாளரான சிந்துஜா பார்த்தசாரதி, கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தன் தந்தையின் பணியிட மாற்றம் காரணமாக வெவ்வேறு ஊர்களில் படிக்கும் வாய்ப்பு சிந்துஜாவுக்குக் கிடைத்தது. பலவித மக்கள், பல வகைக் கலாச்சாரம் எனத் தன் மன அடுக்குகளில் படிந்துவிட்டவற்றை ஒளிப்படங்கள் வாயிலாக மீட்டெடுத்துவருகிறார்.

சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் சிந்துஜாவுக்கு உளவியலாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஆகிய அடையாளங்களும் உண்டு. சமூக அக்கறையும் தொலைதூரப் பயணங்களும் தன் ஒளிப்பட ஆர்வத்துக்கு உத்வேகம் அளிப்பதாக சிந்துஜா சொல்கிறார். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட மனிதர்கள் சார்ந்து தனது ஒளிப்படப் பயணத்தை அமைத்துக்கொண்டிருக்கிறார்.

2009 முதல் ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கிய சிந்துஜா, ஆரம்பத்தில் இயற்கைக் காட்சிகளை மட்டும் படமெடுத்திருக்கிறார். பார்வையும் சிந்தனையும் விரிவடைய, சமூகத்தின் பக்கம் இவரது கேமரா திரும்பியது. பாலியல் சிறுபான்மையினர், முத்தலாக், ஜல்லிக்கட்டுப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம், தோல் தொழிற்சாலைக் கழிவுக்கு எதிரான போராட்டம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எனப் பலவற்றையும் ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

போராட்டங்கள், இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்ட இந்த நாளில் எங்கெல்லாம் உரிமைப் போராட்டம் வலுக்கிறதோ, அங்கெல்லாம் சிந்துஜா சென்றுவிடுகிறார். மணிப்பூர் ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் தொடங்கி ஏராளமான போராட்டக் களங்களை இவர் கண்டிருக்கிறார். ஒளிப்படங்களோடு தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளாமல், அவை தொடர்பான கட்டுரைகளையும் இணைய இதழ்களில் எழுதிவருகிறார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி கிராமத்தில் தேவதாசி முறை கடைப்பிடிக்கப்பட்டுவருவதை 2013-ல் ஒளிப்பட ஆதாரத்துடன் இவர் எழுதினார். அதற்குப் பிறகு தேவதாசி முறையை ஒழிக்க அங்குள்ள அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததைத் தன் பணிக்குக் கிடைத்த அங்கீகாரமாக சிந்துஜா கருதுகிறார். கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி திருநங்கையர் ஒன்றுகூடும் நிகழ்வை ஆவணப்படுத்தியதற்காக 2013-ல் ‘லாட்லி ஊடக விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. 2016-ல் ‘விட்ச் ஹன்ட்டிங்’ என்ற ஆவணத்துக்காக விருது பெற்றிருக்கிறார்.

உலகில் எந்தப் பகுதியில் நடக்கும் போரிலும் பெண்களும் குழந்தைகளும் அதிக பாதிப்புக்கு ஆளாவதாகக் குறிப்பிடும் சிந்துஜா, ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட மிகக் கொடூரமான இனவெறித் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்களை டெல்லி முகாமில் சந்தித்து ஆவணப்படுத்தியிருக்கிறார்.

போராட்டங்களை ஆவணப்படுத்த இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் போயிருக்கேன். இங்க பெண்களுக்கு எந்த அளவுக்குப் பாதுகாப்பு இருக்குன்னு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சில முக்கியமான போராட்டங்களையும் நிகழ்வுகளையும் படமெடுக்கும்போது கொஞ்சம் பயமாவும் இருந்துச்சு. ஆனா ஒரு மாற்றத்துக்கான வித்தா இந்தப் படங்கள் இருக்கக்கூடுங்கற நினைப்பே பயத்தைப் போக்கிடுச்சு” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் சிந்துஜா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in