

பொதுவாகவே தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கும் தமிழர்களுடைய மனநிலைக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அதுவும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களுக்குத் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இருக்கக்கூடிய காதல் உணர்வோடும் தத்துவ உணர்வுகளோடும் வெளியில் தெரியாத ஒரு மர்ம பிணைப்பு உண்டு.
சிறுவயதில் நாங்கள் அனைவரும் மரமேறி குரங்கு விளையாடிக்கொண்டிருக்கும்போது எதிர்வீட்டு செல்வி அக்கா தன்னுடைய டேப் ரெக்கார்டரில், ‘உன்ன நம்பி நெத்தியில பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே’ என்கிற பாடலைத் திரும்பத் திரும்ப ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்ததன் காரணம் எங்களுக்கு அப்போது விளங்கவில்லை. அதற்கும் அடுத்த வீட்டு நாகராஜன் அண்ணனுக்காக அவர் ஒலிக்கவிட்ட பாடல் அது என்பது நாகராஜன் அண்ணன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட அன்றுதான் தெரிந்தது. அன்று செல்வி அக்கா தன்னை மாய்த்துக்கொண்டார். நாகராஜன் அண்ணனுக்கே தெரியாத அந்தக் காதல் அப்படியான ஒரு சூழ்நிலையில் மரித்துப் போயிற்று.