Published : 15 Jul 2018 10:05 AM
Last Updated : 15 Jul 2018 10:05 AM

எசப்பாட்டு 44: வெள்ளி கிரகவாசிகள் அல்ல பெண்கள்

கா

லம் காலமாக நம் மனங்களில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும், ‘ஆண் வேறு வார்ப்பு. பெண் வேறு வார்ப்பு. இது இயற்கையின் படைப்பு. இதை மனிதர்களால் மாற்ற முடியாது. அப்படியே ஏற்றுக்கொண்டு, புரிந்துகொண்டு வாழ்ந்தால்தான் இணக்கமும் நிம்மதியும் கிடைக்கும்’ என்ற கருத்தை வெவ்வேறு மொழிகளில் சூப்பர் ஸ்டாரும் ஜான் க்ரேயும் இன்னும் பலரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

உலகத்தில் பரிசுத்த வேதாகமத்துக்கு அடுத்தபடியாக அதிகமாக (5 கோடி பிரதிகளுக்கு மேலாக) விற்பனையான புத்தகம் ஜான் க்ரே எழுதிய Men are from Mars women are from Venus.

பொம்பளை பொம்பளையா இருக்கணுமா?

‘ஒரு காலத்தில் ஆண்கள் எல்லோரும் செவ்வாய் கோளில் இருந்தனர். பெண்கள் எல்லோரும் வெள்ளி கோளில் இருந்தனர். அப்புறம் ஆண்கள் புறப்பட்டு வெள்ளி கோளுக்குப் போனார்கள். பெண்கள் இருகரம் விரித்து ஆண்களை வரவேற்றுத் தழுவி அன்பை வெளிப்படுத்தினார்கள். அதற்குப் பிறகுதான் ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து பூமிக்கு வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினார்கள். நாளாக நாளாக இருபாலருக்கும் தாங்கள் வெவ்வேறு கோள்களிலிருந்து வந்தவர்கள் என்பதே மறந்துவிட்டது. இருவரும் ஒரே கோளிலிலிருந்து வந்ததுபோல நினைத்து, தாங்கள் எதிர்பார்ப்பதுபோல மற்றவர் இல்லை என்று புகார் சொல்லிக்கொண்டும் சண்டை போட்டுக்கொண்டும் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே நாசமாக்கிக்கொள்ளத் தொடங்கினர்’ என்று ஆரம்பிக்கிறது அந்தப் புத்தகம். சலிப்பூட்டிய அந்தப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, ‘அதிகமா கோபப்படுற பொம்பளையும் அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது’ என்ற வசனமும் ‘பொம்பளைன்னா பொறுமை வேணும்; அவசரப்படக் கூடாது. மொத்தத்துல பொம்பளை பொம்பளையா இருக்கணும்’ என்ற சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக்கும் நினைவுக்கு திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருந்தன.

அபத்த வாதங்கள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு பிரச்சினை, ஒரு உரசல், ஒரு நெருக்கடி வரும் தருணத்தில் பெண் அதைத் தன்னுடைய ஆணுடன் விரிவாகப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுவாள். ஆனால், அவள் பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் ஆண் அப்பிரச்னைக்குத் தீர்வு சொல்லத் தொடங்கிவிடுவான். முழுதாக அவள் பேச்சைக் கேட்க மாட்டான். அவள் அதில் சமாதானம் ஆகாமல் பேச்சைத் தொடர முற்பட்டால், ஆண் அங்கிருந்து தப்பியோட முயல்வான். தனிமையை நாடுவான். தனிமையில் தன் மனக்குகையில் போய் அமர்ந்துவிட்டு வெளியே வந்தால், பெண்ணின் பேச்சைக் கேட்கும் பக்குவத்துக்கு வந்துவிடுவான். பெண்ணானவள் அதுவரை பொறுமை காக்க வேண்டும். அவனுடைய குகைத் தனிமையைக் கலைக்க முயலக் கூடாது. செவ்வாய் கோளில் இருந்தபோது ஆண் இப்படியான கலாச்சாரத்துக்குள் இருந்தவன் என்பதைப் பெண் புரிந்துகொள்ள வேண்டும். வெள்ளி கோளின் கலாச்சாரப்படி பெண் பேச ஆசைப்படுகிறாள் என்பதை ஆண் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான் விஷயம்; பிரச்சினை முடிந்தது என்கிறார் ஜான் க்ரே.

இதற்கு மேலும் சென்று, வெள்ளி கோளில் ஷாப்பிங் மால்கள் நிறைய இருந்ததால் பூமிக்கு வந்த பிறகும் பெண்கள் கடைகளுக்குப் போவதை அதிகமாக விரும்புகிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே போகிறார். இதைவிட அபத்தமான வாதமும் புரிதலும் இருக்க முடியாது. இந்தக் கருத்தாக்கத்தை மையமாகக்கொண்டு அவர் தொடர்ந்து எழுதிய பல புத்தகங்கள் லட்சக்கணக்கான பிரதிகள் விற்கின்றன. அவர் நடத்துகிற ஆண்-பெண் உறவுக் கருத்தரங்குகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றபடி இருக்கின்றனர்.

பார்வையில் கோளாறு

கோடீஸ்வரர் ஆவது எப்படி, ஒரே மாதத்தில் பணக்காரராவது எப்படி, பெண்களைக் கவர்வது எப்படி, தொழிலில் வெற்றியடைவது எப்படி என்று தமிழிலும் சுய உதவிப் புத்தகங்கள் வருகின்றன. இன்று ஆண்-பெண் உறவு பல வீடுகளில் சுமுகமாக இல்லை. வேலைத்தளங்களில் இணக்கமாக இல்லை. அதைச் சுமுகமாக்கும் வைத்தியம் என்னிடம் இருக்கிறது வாங்க என ஒருவர் அழைத்தால் மக்கள் போய்விடுகிறார்கள். சர்வரோக நிவாரணம் அளிக்கும் தாயத்து, லேகியம் போன்றவைதான் இப்புத்தகங்கள். அவை விற்பனையில் சாதனை படைக்கின்றன. அந்த அளவுக்கு மக்கள் வாழ்நிலை கீழே இருக்கிறது. மந்திரம்போல, வாழ்வில் உடனடியாக முன்னேறிவிட வேண்டும் என மக்கள் ஆசைப்படுகிறார்கள் என்று பொருள்.

ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை இப்படி எல்லா ஆண்களும் ஒரே மாதிரி சிந்திப்பது போலவும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரி உணர்வது போலவும் ஒரு கருத்தாக்கத்தைக் கற்பிதம் செய்துகொண்டு அதன் அடிப்படையில் தீர்வுகளை வழங்குவது, அறிவியல் பார்வையற்றது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சில உடல் சார்ந்த வேறுபாடுகள் இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஒரு சிறிய சதவீதம் உளவியல் வேறுபாடுகளும் இருக்க முடியும். மற்றபடி ஆணும் பெண்ணும் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் பிறந்த சமூகமும் அச்சமூகத்தின் பண்பாடும் அவரவர் பொருளாதார நிலையும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன. அவர்களின் குணத்தைத் தீர்மானிக்கும் ஒரே ஒரு அம்சமாக பாலினத்தை மட்டும் முன்னிறுத்தும் பார்வைகள் குறைபாடுடையவை.

சிறகடிக்கும் பெண்கள்

ஆணோ பெண்ணோ அவரை ஒரு தனி நபராகப் பார்க்க வேண்டும். அவர்கள், சமூகத்தில் இயங்கும் தனிநபர்கள். ஆணும் பெண்ணும் வேறானவர்கள் என்ற வாதத்தைவிட ஒவ்வொரு தனிநபரும் வேறு வேறானவர் என்று பேசுவதே சரியானதாக இருக்கும். தனி நபர்களான இரு பெண்களுக்கிடையில் வேறுபாடுகள் இல்லையா, இரு ஆண்களுக்கிடையில் வேறுபாடுகள் இல்லையா என்ற கோணத்தில் ஆராயும்போதுதான் உறவுச் சிக்கல்களுக்கு விடை கிடைக்கும். அதல்லாமல், பெண்களை எல்லாம் ஒரே வகை மாதிரியாகக் (Stereotype) கட்டமைத்துக்கொண்டு விவாதிப்பது,

‘பெண்ணெல்லாம் பரிச்சையிலே முதல் இடம்தாங்க,

நம்ப பசங்களத்தான் எங்கே அவுங்க படிக்க விட்டாங்க?

பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க,

நம்ப பையன் முகத்தில் தாடியத்தான் முளைக்க வச்சாங்க.

பெண்ணெல்லாம் உலக அழகி ஆகி வந்தாங்க

ஆணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க’

என்று மொக்கையாகப் பாட்டு பாடும் இடத்துக்குத்தான் நம்மை அழைத்துச்செல்லும். பெண்மை என்பதும் ஆண்மை என்பதும் சமூகத்தால் கட்டமைக்கப்படுபவையே. இந்தக் கட்டமைத்த பெண்மை என்பதும்கூட ஒவ்வொரு பெண்ணிடத்திலும் ஒரே மாதிரி கட்டமைந்துவிடுவதும் இல்லை. பெண்கள் விழிப்படைந்துவரும் இன்றைய காலத்தில் இந்தக் கட்டமைப்புகள் தகர்ந்து வீழத் தொடங்கியுள்ளன. சுய அடையாளத்தோடு பெண்கள் தம்மைத் தாமே சுதந்திரப் பெண்களாக வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். இந்த உயிர்ப்புள்ள மாற்றத்தைத் தடுக்கும் தடைக்கற்களாகவே அவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் என்பது போன்ற தட்டை வாதங்கள் அமையும்.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x