

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவி, அவருடைய தோழி மற்றும் குடும்பத்தாருடன் தன்னுடைய வீட்டில் வந்து தங்குவதால் தன்னால் இயல்பான ஒரு திருமண வாழ்வில் ஈடுபட இயலவில்லை என்று விவாகரத்து கோரி இருந்தார். உடனே அவருடைய மனைவி அவர் வரதட்சிணை கேட்பதாகச் சொல்லி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். ஒருவர் ஒரு முக்கியமான காரணத்தைச் சொல்லி விவாகரத்து கேட்ட உடனே அவருடைய மனைவி இப்படியான ஒரு புகாரை அளித்ததையும் அந்தப் புகாரின் பேரில் காவல்துறை அந்தக் கணவர் மீது நடவடிக்கை எடுத்ததையும் கொல்கத்தா நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
ஆணின் துயரம்: எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன் தன்னுடைய சொந்த அனுபவத்தை முன்வைத்து விவாகரத்தால் ஓர் ஆண் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறான் என்பதைத் தொடர்ந்து எழுதிவருகிறார். சில நேரம் அதீதமாகத் தெரியும் அந்த அனுபவங்கள், மேற்கூறியதைப் போன்ற சில சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது ஆண்களும் பல நேரம் பெண்களால் - விவாகரத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு திருமண உறவு நிலைத்திருப்பது என்பது இருவர் கையில் மட்டுமே இருக்கிறது.
ஆணும் பெண்ணும் சம மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாழ்வதைப் பொறுத்துத்தான் அவர்களின் திருமணம் வெற்றிகரமான பயணமாக அமையும். அப்படி அல்லாமல் ஆணோ பெண்ணோ அவர்கள் தங்களுடைய சுயத்தை மட்டும் முன்னிறுத்தி ஒரே கூரையின் கீழ் வாழ்வது தோல்விகரமான முயற்சியாகத்தான் இருக்கும்.
புரிந்துகொள்வதுதான் அன்பு: தன் மனைவி அவருடைய தோழியையும் தோழியின் குடும்பத்தையும் கொண்டு வந்து தன் வீட்டில் வைத்துக்கொள்வதை ஒரு கணவனால் ஒப்புக்கொள்ள முடியாதது போலவே தன் கணவன் அப்படிச் செய்வதை எந்த மனைவியும் ஒப்புக்கொள்ள மாட்டார். இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒரு பந்தம் திருமணம் என்கிற புரிதல் பலருக்கும் இருப்பதில்லை. இங்கே திருமணம் என்பது ஓர் ஆணோ பெண்ணோ அடுத்தவருடைய குடும்பத்தையே அரவணைத்துக்கொள்வதாக இருக்கிறது.
பெண்களுக்குச் சாதகமாக நிறைய தீர்ப்புகளும் நிறைய சட்டங்களும் இருக்கிற இன்றைய சூழலில் அதைச் சரியான முறையில் பெண்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆண்களைப் பழி வாங்குவதற்காக அத்தகைய தீர்ப்புகளையும் சட்டங்களையும் பெண்கள் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள இயலாது. ஒருவரை மற்றவர் புரிந்துகொள்வதுதான் பாலினம் சார்ந்த சமநிலையை உறவில் ஏற்படுத்தும். அதை விட்டுவிட்டு ஒருவர் மீது மற்றொருவர் பழி சொல்வதோ பழி வாங்குவதோ உறவின் பெருமையாக இருக்க முடியாது.
குழந்தைகள் இருவருக்கும் பொது பெரும்பாலும் விவாகரத்தான பெண்கள் தங்கள் கணவரிடம் தங்களுடைய குழந்தைகளைக் காட்ட விரும்புவதில்லை. அதேபோல் சில ஆண்களும் குழந்தைகளை வாங்கிக்கொண்டு மனைவியிடம் குழந்தைகளைக் காட்டாமல் இருப்பதையும் நான் அறிவேன். இரண்டிலும் விதிவிலக்குள் உண்டு. ஆனால், விவாகரத்தான பெற்றோர் இப்படிச் செய்வது அந்தக் குழந்தைகளின் மனநிலையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைப் பெரும்பாலும் பலரும் அறிவதில்லை. அவ்வளவு ஏன்... விவாகரத்தையே நம் சமூகம் சரியான முறையில் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
நாம் மூன்றாவது நபர்: ஓர் உறவு ஏன் முறிந்து போகிறது என்பது குறித்து எந்தப் புரிதலும் இல்லாமல்தான் அவர்கள் ஒருவரை மற்றொருவர் எதிரியாகப் பாவித்துக்கொள்கிறார்கள். பிரிந்த பிறகும்கூட நண்பர்களாக இருக்க முடியும் என்பதும் தன் குழந்தைகளின் நலனில் இருவருமே அக்கறை செலுத்த இயலும் என்கிற நம்பிக்கையும் அவர்களிடம் நிலைத்திருப்பதில்லை.
ஓர் உறவில் ஏற்படும் சிக்கல்களை மூன்றாவது நபராக வெளியில் நின்றுகொண்டு விமர்சிப்பதை நாம் கைவிட வேண்டும். அப்படிக் கைவிடும்போதுதான் ஒரு சமூகத்தில் தனிமனிதச் சுதந்திரமும் மரியாதையும் மதிப்பும் ஒவ்வொரு மனித உயிருக்கும் ஏற்படும். இருவர் பிரிவது என்பது அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டது. அதை ஏதோ புறணி பேசுவதுபோலப் பேசி ஒரு வாழ்க்கையைப் புறணியின் மறு உருவமாகச் சித்தரித்துவிடுகின்றனர். இது விரைவில் மாறும் என்கிற நம்பிக்கை மட்டுமே நம்மிடம் எஞ்சியிருப்பதுதான் உண்மையில் துயரம்.
(உரையாடுவோம்)
- dhamayanthihfm@gmail.com