

சமூக ஊடகங்களில் தும்மல் போட்டால்கூடப் பெரிதாக அதிர்வு இருக்கக்கூடிய ஒரு தளத்தில் ஒரு பெண்ணின் (சினேகா என்று வைத்துக்கொள்வோம்) தற்கொலை கவனிக்கப்படாமலே போயிருக்கிறது. அந்தப் பெண் முகநூலில் கொடுத்த தன்னுடைய வாக்குமூலத்தை இங்கே பலரும் பார்க்கவும் இல்லை, அது குறித்து விவாதிக்கவும் இல்லை. சினேகாவின் வறண்ட கண்களுக்குள் இருந்த காயங்களின் கண்ணீரை அவர்கள் அளவிடவும் இல்லை.
சிறு வயதிலேயே பெற்றோருக்குள் ஏற்பட்ட மன பேதம் காரணமாக இருவரும் விலகிவிட, சினேகாவின் அம்மா வேறொரு திருமணம் செய்துகொண்டார். அம்மாவை மணந்துகொண்ட அந்த மாற்றுத் தகப்பன் சினேகாவிடம் சிநேகமாக இருந்ததே இல்லை. பல்வேறுவிதமான வன்முறைகளுக்கு சினேகா சிறுவயதிலேயே ஆளானார். அதை அம்மாவிடம் சொன்னபோதும் அவர் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எனவே, குடும்பத்துடன் ஏற்பட்ட பேதம் காரணமாக சினேகா தன் தோழியின் வீட்டில் தங்கியிருந்தார்.
அப்போது அவர் அம்மாவின் அண்ணன் - அதாவது சினேகாவின் தாய் மாமா சினேகாவின் நிலை கருதி தன்னுடைய சொத்துகளை சினேகாவின் பெயரில் மாற்றி இருக்கிறார். மாற்றிய சில நாள்களிலேயே மாமா இறந்துவிட, அப்போதுதான் சினேகா என்கிற பெண் குறித்து அவரது குடும்பம் கவலைப்படுகிறது. இது முழுக்க முழுக்க சொத்துக்காக என்று சினேகா தன்னுடைய வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறார். அவரின் பாட்டி, சித்தி, சித்தியின் பிள்ளைகள் அனைவரும் அந்தச் சொத்துக்காகத் தன்னைப் பின்தொடர்ந்ததாகச் சொல்கிறார்.
சினேகாவின் அம்மா என்பவர்தான் இங்கே முக்கியமான பிரச்சினை. சினேகா எங்கெல்லாம் வேலை பார்க்கிறாரோ அங்கெல்லாம் போய் பிரச்சினை செய்து, அந்த வேலையில் இருந்து சினேகாவை நீக்குமாறு செய்திருக்கிறார். சினேகா தங்கியிருந்த தோழியின் தந்தைக்கு வயது 77. ஆனால், சினேகாவை அவர் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதாக அந்தக் குடியிருப்பில் இருக்கும் ஒவ்வொரு வீடாகச் சென்று சொல்லி சினேகாவை அவமானப்படுத்தி இருக்கிறார்.
அதை மறுத்துத் தானாகத்தான் தோழியின் வீட்டில் வந்து தங்கி இருப்பதாகக் காவல் துறையிடம் எழுதிக் கொடுத்தபோதும் சினேகாவின் அம்மா சொத்துக்காக அவரை விடுவதாக இல்லை. ஒருகட்டத்தில் காவல் துறையினரும், “அம்மாவை விடவா உங்களுக்கெல்லாம் சினேகாவின் மேல் அக்கறை?” என்று அவரின் தோழியிடமும் தோழியின் தந்தையிடமும் சொல்லி சினேகாவின் அம்மாவுடன் சினேகாவை அனுப்பி வைத்திருக் கிறார்கள்.
வந்ததிலிருந்து பிரச்சிசனைதான் என்று வாக்குமூலத்தில் சொல்லி இருக்கும் சினேகா, இங்கே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இத்தனைக்கும் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் டிசைனிங் படித்து நல்ல வேலையில் இருக்கக்கூடியவர், வாக்கு மூலத்தில் சினேகா, “விவாகரத்து செய்துகொள்வதாக இருந்தால் தயவுசெய்து குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள்” என்று எல்லாப் பெற்றோரிடமும் ஒரு விண்ணப்பம் வைக்கிறார்.
அதைக் கேட்டதிலிருந்து பல்வேறு கேள்விகள் என் மனதில் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. சினேகாவின் பெற்றோருக்கு மனபேதங்கள் இருந்ததும் அவர்கள் பிரிந்ததும் கூடப் பிரச்சினை இல்லை. அதற்குப் பிறகு அந்தக் குழந்தையை எப்படி சினேகாவின் அம்மா கையாண்டார் என்பதுதான் முக்கியமான விஷயம்.
சமூகத்தில் தாய்மை என்பது அதிகமாகப் புனிதப்படுத்தப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் பண்டரிபாயைத் தூக்கிக்கொண்டு, “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...” என்று பாடும் உணர்வுபூர்வக் காட்சிகள் நம் தமிழ்க்கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கின்றன.
அம்மா என்பவள் அடிப்படையில் ஒரு மனுஷி. அவளுக்கும் மற்றவர்களையும் போலவே எல்லா உணர்வுகளும் உண்டு. இதை பிரபஞ்சன் தன்னுடைய சிறுகதை ஒன்றில் தெள்ளத் தெளிவாக எழுதியிருப்பார். நான் இப்படி எழுதுவது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்காது. என் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மனிதர்களின் அனுபவங்களில் இருந்தும் இதை எழுதுகிறேன்.
என் அம்மா அண்மையில் தவறிவிட்டார். அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் என்றுமே இருந்ததில்லை. இதைப்பற்றிச் சொல்லவோ ஒப்புக்கொள்ளவோ முடியாமல் பல வருடங்களாகக் குற்றவுணர்வோடு இருந்திருக்கிறேன். என் அம்மாவின் மடியில் நான் படுத்ததே இல்லை. என் தலைமுடியை அவர் கோதிவிட்டதே இல்லை. இப்படியான காட்சிகளை எல்லாம் நான் வாசிக்கும்போதோ பார்க்கும்போதோ என்னை அறியாமல் எனக்கு என் மீதே
ஒரு கோபம் வரத்தான் செய்திருக்கிறது. என் அம்மா என்ன நினைக்கிறாரோ அதை மட்டுமே நான் செய்ய வேண்டும் என்று இறுதிவரை இருந்தார். அவர் எனக்கு நல்லதுதான் செய்வார் என்று மற்றவர்கள் சொல்லச் சொல்ல, ‘அப்படி என்றால் நான் விதி மீறுகிறேனோ’ என்கிற ஒரு குற்றவுணர்வை நானே எனக்குள் பல வருடங்களாக வளர்த்துக்கொண்டேன். ஆனால், அது ஒரு கட்டத்தில் என்னைத்தான் அழித்தது. இந்த வாழ்க்கை என்னுடையது. அதை நான் நேர்மையாக வாழ வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் குற்றவுணர்விலிருந்து நான் மீள்வதற்கு என் அம்மாவின் அதிகாரத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டியதாயிருந்தது.
ஆனால், அம்மா ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று இதை எழுதும் இந்த நொடிவரை புரிந்ததே இல்லை. பல பெண்கள்கூட அத்தகைய அதிகாரத் தன்மையுடன்தான் குடும்பத்தினரிடம் நடந்துகொள்கிறார்கள். யாருடைய வாழ்க்கைக்கும் யாரும் நீதிபதி அல்ல. அதைச் செப்பனிட யாருக்கும் அதிகாரமும் இல்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்துகொள்வார்கள் என்கிற மதிப்பும் மரியாதையும் மட்டுமே குடும்பக் கட்டமைப்பிற்கு இன்று மிக முக்கியமான தேவையாக இருக்கிறது. சினேகாவின் தற்கொலை என்னை மிகவும் பாதிப்படைய வைத்தது.
மனரீதியாக அவர் எவ்வளவு காயப்பட்டு இருப்பார் என்பதை யோசிக்கும்போதே, ஆதரவற்று நிற்கும் ஓர் இழிநிலைதான் கண்முன் காட்சியாக வருகிறது. உயிர் வாழ வழியற்ற ஓர் உலகில் பெண்களைத் தெய்வங்களாகவும் சக்தியாகவும் உருவகப்படுத்துவதை இன்னும் எவ்வளவு காலம் இந்தச் சமூகமும் பெண்களும் நம்பப்போகிறார்கள்?
அம்மாவால் பாதிக்கப்படும் குழந்தை களுடைய மனநிலை இந்தச் சமூகத்தில் விவாதத்திற்கு வராத ஒரு விஷயம். தாங்கள் நினைத்த மாதிரிதான் பிள்ளைகளின் வாழ்க்கை அமைய வேண்டும் என்று அடம்பிடிக்கும் அம்மாக்களின் குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதே இல்லை. ஏனெனில், அவர்கள் வாழ்வது அவர்கள் அம்மாவின் வாழ்க்கையை அல்ல; அவர்களின் வாழ்க்கையை. கல்யாணம் முதல் பிடித்த செருப்புவரை எல்லாமே அம்மா நினைத்தபடிதான் குழந்தைகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலை இதற்கு முக்கியக் காரணம்.
இது, இந்தக் குழந்தைகள் வளர்ந்த பிறகும் அவர்களுடைய வாழ்க்கையை, தொழில் அணுகுமுறையை எப்படிப் பாதிக்கிறது என்பதை யாருமே கவனத்தில்கொள்ள முற்படுவதே இல்லை. சினேகாவின் மரணத்தின் மூலமாகவாவது நாம் இந்த விவாதத்தை இன்னும் வலுவாக மேற்கொள்வோம்.
(உரையாடுவோம்)
dhamayanthihfm@gmail.com