

வாழ்க்கையில் எப்போதாவது அணிகிற அல்லது ஒன்றிரண்டு முறைக்கு மேல் அணிய முடியாத ஆடைக்காக ஏன் ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க வேண்டும்?
இந்தக் கேள்விக்கு விடைசொல்லும் நோக்கத்துடன் ‘விடார்’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சரிதா மணிகண்டன். திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற சுப நிகழ்வுகளின்போது பலரும் ஆடம்பரமான ஆடையை அணியவே விரும்புவார்கள்.
இன்னும் சிலர் பாரம்பரியத்தின் வழிசென்று தங்கள் வீட்டுப் பெருமையைப் பறைசாற்றும் நகைகளை அணிய விரும்புவார்கள். விழாக்களின்போது பெண்கள் அணியக்கூடிய ஆடைகளை இந்த நிறுவனம் வாடகைக்குத் தருகிறது. ஒவ்வொரு விழாவுக்கும் பிரத்யேக ஆடைகளை வடிவமைத்திருப்பதாக சரிதா சொல்கிறார். அதற்குத் தன் பத்தாண்டு கால ஃபேஷன் துறை அனுபவம் கைகொடுப்பதாக அவர் சொல்கிறார்.
இன்று பலரும் கடைக்குப் போய் பொருட்களை வாங்குவதைவிட ஆன்லைனில் ஆர்டர் செய்வதையே விரும்புகிறார்கள். நேரமும் அலைச்சலும் குறைவு என்பதுதான் அவர்கள் சொல்லும் முதன்மை காரணம். அந்தக் கருத்துடன் உடன்படுகிற சரிதா, தன் வியாபாரத்துக்கான அடித்தளமாக ஆன்லைனேயே தேர்ந்தெடுத்திருக்கிறார். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ற ஆடைகளை வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே புக் செய்து பெறலாம் என்று சொல்லும் சரிதா, ‘அம்மா – மகள்’ கலெக்ஷன்ஸ் தங்கள் நிறுவனத்தின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று என்கிறார்.
ஆடையின் தரம், கச்சிதமான அளவு இந்த இரண்டையும் கவனத்தில்கொண்டு செயல்படுவதோடு தொடர்ந்து புதுப்புது டிசைன்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக சரிதா சொல்கிறார். புடவை, சல்வார், பார்ட்டி ஆடைகள் எனப் பல ரக ஆடைகளோடு அவற்றுக்குப் பொருத்தமான நகைகளையும் இவர்கள் வாடகைக்குத் தருகிறார்கள்.