

குடும்பப் பொறுப்பு, அலுவலக வேலை எனக் காலில் சக்கரம் கட்டியதுபோல் ஒவ்வொரு நாள் காலையும் கயல்விழியின் அம்மா பரபரப்பாக இருப்பார். அலுவலகத்துக்குச் செல்லும்வரை அவருக்கு மூச்சுவிடக்கூட நேரம் இருக்காது.
குழந்தைகள் எழுவதற்குள் சமையல் வேலையையும் வீட்டு வேலையையும் தன் கணவரின் உதவியோடு முடித்துவிடுவார். அதன் பிறகு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கான வேலையைத் தொடங்குவார். அன்றும் அப்படித்தான் அரக்கப் பரக்க எழுந்து வேலைகளுக்கு நடுவே கயல்விழியை அவர் குளிக்கவைத்தார். அப்போது கயலின் கையிலும் கன்னத்திலும் நகக் கீறல்கள் இருந்ததைக் கவனித்தார். “என்ன கயல் இது? ஏன் இப்படி உடம்பெல்லாம் கீறி இருக்கு?” எனக் கேட்டார். “நேத்து கிளாஸ்ல ரோகிணிய தள்ளி உட்காரச் சொன்னதுக்கு, அவ முடியாதுன்னு சண்டைப் போட்டுட்டு என்னைக் கிள்ளிவிட்டுட்டா” என அழுதபடி கயல்விழி சொன்னாள்.
தவறான போக்கு
கயலின் அம்மாவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன் மகள் இப்படி அடி வாங்கிக்கொண்டு வந்திருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மகளை அவசர அவசரமாகக் குளிக்கவைத்து, நகக் கீறல் பட்ட இடங்களில் எண்ணெய் தடவினார். “அவ உன்னை அடிக்கிற வரை நீ சும்மாவா இருந்த? உடனே மிஸ்கிட்ட சொல்ல வேண்டியதுதானே. இல்லாட்டி பதிலுக்கு நீயும் அவளை அடிச்சிருக்கணும்” என மகளுக்கு அறிவுரை சொல்லும் சாக்கில் மற்றவர்களை எப்படித் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தனக்குத் தெரிந்த தொனியில் சொன்னார்.
இன்னும் சில பெற்றோரோ சம்பந்தப்பட்ட குழந்தையின் வீட்டுக்கு போன் செய்து, “உங்க பையன்/பொண்ணு என்னோட பையனை/பொண்ணை அடிச்சிருக்கான். குழந்தைக்குக் கொஞ்சம் புத்தி சொல்லுங்க” எனக் கடுகடுப்புடன் சொல்வார்கள். இந்த மாதிரி ஒரு பெற்றோர் மற்றொரு பெற்றோரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவது தவறு.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல் எல்லாப் பெற்றோருக்கும் அவரவர் குழந்தைகள் நல்லவர்களே. மேலும், பெற்றோர் இவ்வாறு நடந்துகொள்வது பிள்ளைகளைத்தான் பாதிக்கும். அதனால்தான், சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோருக்கு போன் செய்யும்போது நமது பிள்ளைகள், “வேண்டாம்மா. போன் எல்லாம் பண்ணாதீங்க” என்று சொல்வார்கள்.
எது சரியான வழிமுறை?
கயலின் அம்மா சொன்னது சரியான அணுகுமுறையல்ல. திருப்பி அடி எனக் கூறுவது பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தைரியம் வரவழைப்பதற்கான வழி என நீங்கள் நினைத்தால் அது தவறு. இது போன்ற பிரச்சினைகளைப் பிள்ளைகள் அடிக்கடி பள்ளிகளில் சந்திக்க நேரிடும் என்பது எல்லோருக்கும் தெரியும். நாமும் ஒரு காலத்தில் இது போன்ற விஷயங்களைக் கடந்துதானே வந்திருப்போம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்.
உங்கள் பிள்ளையை மற்றொரு மாணவன் அடித்தாலோ அல்லது அவர்கள் வேறுவிதமான பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தாலோ அவர்களிடம் ‘என்னை அடிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. என்மேல் உனக்கு எதாச்சும் கோவம் இருந்தா அதை முதல்ல சொல்லு’ என்று தைரியமாகக் காரணத்தைக் கேட்கச் சொல்ல வேண்டும். காரணம் கேட்கும் இந்த முறையே குழந்தைகளுக்கு மனவலிமையை அதிகரிக்கும். மேலும், சண்டை போட்டுக்கொள்வதோ அடிப்பதோ பிரச்சினைக்குத் தீர்வாகாது என்பதை அவர்களுக்கு அது உணர்த்தும்.
(வளர்ப்போம்,வளர்வோம்)
கட்டுரையாளர், குழந்தைகள் நல மற்றும் வளரிளம் பருவ சிறப்பு மருத்துவர்.
தொடர்புக்கு: dryamunapaed@yahoo.com