

நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதே வாசிப்பைப் பிடித்துவிட்டேன். என் பிடிக்குள் இருக்கும் வாசிப்புப் பழக்கம் மணி விழா கடந்தும் தொடர்கிறது. முதலில் அறிமுகமானாள் ‘ராணி’. புதன்தோறும் வருவாள். அதில், சிறுவர் பகுதியில் ஒரு பக்கத் தொடர் கதையை, மதியம் சாப்பிட வீட்டிற்கு வரும்போது, முதலில் நான்தான் படிப்பேன். பள்ளிக்குச் சென்றதும் வகுப்புத் தோழிகளுக்குச் சுடச்சுடக் கதை சொல்வது பேரானந்தம்.
மேல்நிலை வகுப்பில் வாசிப்பை வளர்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கதைப் புத்தகங்கள் தருவார்கள். மற்றவர்களின் புத்தகங்களையும் இரவல் வாங்கி வாசிப்பேன். அப்போது, தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார் நாவல்களுக்கு டிமாண்ட் அதிகம். அதில் வரும் இந்திரா, மைனா, கத்தரிக்காய் பாத்திரங்களும், குளுக்கோஸ் மாத்திரையும் இன்றும் நினைவில் உள்ளன. சங்கர்லால் ‘டீ’தான் குடிப்பார். ‘எனக்கு டீதான் பிடிக்கும்’ எனத் தோழிகளிடம் சொல்லும்போது, “நீ என்ன துப்பறியும் சங்கர்லாலா?” என்று கேட்பார்கள். எஸ்எஸ்எல்சி முடித்ததும் திருமணத்திற்கு முன் நிறைய வாசித்தேன்.
அப்பா, ராஜபாளையம் காந்தி கலைமன்றத்திலிருந்து நிறைய புத்தகங்கள் எடுத்துவருவார். சாண்டில்யன் நாவல்கள், நா.பார்த்தசாரதி புதினங்கள் அனைத்தும் வாசித்துவிட்டேன். ‘யவனராணி’யும் ‘சத்திய வெள்ள’மும் பிடித்தமான நாவல்கள். சமீபத்தில் வாசித்த வளர்ந்துவரும் எழுத்தாளர் தி.வள்ளியின் ‘சுந்தர பவனம்’ பிடித்த நாவல் பட்டியலில் சேர்ந்துவிட்டது. உள்ளூர் நூலகத்தில் ஐந்து ரூபாய் கட்டி எல்லா நாவல்களும் படித்து முடிக்க ‘இனிமேல் புதிதாகப் புத்தகம் வந்தால் தகவல் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டார் மேற்பார்வையாளர்.
அப்பா, அண்ணன், நான், தம்பி நால்வரும் விரும்பி வாசிப்போம். இப்பவும், பிறந்தகத்திலிருந்து கிளம்பும்போது அப்பா புத்தகங்கள் தந்து வழியனுப்புவது வழக்கம்.
தினசரி இரவு அரை மணி நேரம் வார, மாத இதழ்கள் வாசிக்க ஒதுக்கி விடுவேன். குழந்தைகள் உள்ள வீட்டில் பொம்மைகள் இறைந்து கிடப்பதுபோல், என் வீட்டில் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் புத்தகங்களைப் பார்க்கலாம். “ஒரே இடத்தில் வைக்க மாட்டியா?” என்று கணவர் அடிக்கடி சலித்துக்கொள்வார். என் கைப்பையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். முதுமை காரணமாக இரவில் தூக்கம் வராத நேரத்தில் எல்லாம் எழுந்து கட்டிலின் அருகில் இருக்கும் புத்தகத்தைப் பிரித்து இரண்டு பக்கங்கள் படித்துவிட்டுப் படுத்தால் விரைவில் இமைகள் இணைந்துவிடும்.
- என்.கோமதி, பெருமாள்புரம், நெல்லை.