பெண்ணின் சக்தி என்ன செய்யும்?

பெண்ணின் சக்தி என்ன செய்யும்?
Updated on
2 min read

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக நான்காவது முறையாக ஹேமந்த் சோரன் அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த வெற்றிக்கு ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனின் அரசியல் அணுகுமுறை மிகப் பெரிய பக்க பலமாக அமைந்து மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க உதவியது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி 56 இடங்களில் வெற்றிபெற்றது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையால் 2024, ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஜேஎம்எம் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும், தலைவரை இழந்த கூட்டம் சிதறிவிடும், ஆட்சியைத் தக்கவைக்க முடியாது எனப் பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன. அந்த நேரத்தில்தான் அரசியல் களத்துக்குள் அதிரடியாகப் புகுந்தார் கல்பனா சோரன்.

கணவர் ஹேமந்த் சோரன் சிறை சென்ற பிறகு, ஜேஎம்எம் கட்சியின் நிறுவனத் தலைவர் ஷிபு சோரனின் நெருங்கிய உதவியாளரும், கட்சியின் முக்கிய இடத்தைப் பிடித்தவருமான சம்பாய் சோரன் முதல்வராக நியமிக்கப் பட்டார். ஜூன் மாதம் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியது. அதன்பிறகு, அவர் முதல்வராக மீண்டும் பதவியேற்றார்.

பின்னர், சம்பாய் சோரன் திடீரென பாஜகவில் இணைந்தார். முன்னதாக, ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட பின்னர், மறைந்த அவருடைய சகோதரர் துர்கா சோரனின் மனைவியும், அவருடைய மைத்துனர் சீதா சோரனும் பாஜகவில் இணைந்தனர்.

கல்பனா சோரன்
கல்பனா சோரன்

கைது நடவடிக்கை, முக்கிய நிர்வாகிகள் கட்சித் தாவல் என இக்கட்டான சூழ்நிலைகளை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சந்தித்தது. அந்த நேரத்தில் ஜார்க்கண்ட் காண்டே தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கல்பனா சோரன் முதன்முறையாகச் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார். அதன்பிறகு, சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் களம் இறங்கினர் ஹேமந்த் சோரன் - கல்பனா தம்பதி.
பொறியியல் பட்டதாரியான கல்பனா சோரன், தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, ஜார்க்கண்ட் முழுவதும் கிட்டத்தட்ட 200 பேரணிகளில் பங்கேற்றார். நாள் ஒன்றுக்கு ஐந்து பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எதிர்க்கட்சியினர், கல்பனா சோரனை ‘ஹெலிகாப்டர் மேடம்’ என அழைத்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இருந்தபோதும் அசராமல் தேர்தல் பணியாற்றினார் கல்பனா.

கணவரின் கைதுக்குப் பிறகு, பழங்குடியினரின் வாக்குகள் பிரியும் எனப் பேசப்பட்ட நிலையில், கல்பனா சோரனின் பரப்புரைக்குப் பழங்குடியினர், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் மூலம், காண்டே தொகுதியில் மீண்டும் கல்பனா சோரன் வெற்றிபெற்றார். கணவர் ஹேமந்த் சோரனை மீண்டும் ஆட்சி சிம்மாசனத்தில் அமர வைத்திருக்கிறார் கல்பனா சோரன்.

கல்பனா சோரன் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர் என்றாலும் அதுவரை அமைதியாக இருந்தவர் ஆண்டுத் தொடக்கத்தில் தான் அரசியல் களத்தில் புகுந்தார். சில மாதங்களிலேயே விமர்சனங்கள், கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி, ஆட்சியை மீண்டும் தக்கவைத்து ஜார்க்கண்ட்டின் அசைக்க முடியாத பெண் சக்தியாக உருவெடுத்துள்ளார் கல்பனா சோரன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in