பொன்னியின் செல்வன் தொழில் குழு | வாழ்ந்து காட்டுவோம்!

பொன்னியின் செல்வன் தொழில் குழு | வாழ்ந்து காட்டுவோம்!
Updated on
2 min read

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டாரம், மூவர்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த 20 பெண்களுக்குச் சணல் பை தயாரிக்க css பயிற்சி 2022இல் நடத்தப்பட்டது. பயிற்சி பெற்ற 13 பெண்கள் ‘பொன்னியின் செல்வன் தொழில் குழு’ என்கிற தொழில் குழுவாக ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கினர். மதிய உணவுப் பை, தண்ணீர் பாட்டில் பை, பெண்கள் கைப்பை, மொபைல் பை மற்றும் இதர புதுமையான மாடல்களைத் தங்களால் இயன்ற அளவு உற்பத்தி செய்கின்றனர்.

சமூகத் திறன் பள்ளி என்பது வெறும் பயிற்சியோடு நின்றுவிடாமல் தொழில் குழுவாகச் செயல்பட்டு புதிய நிதி இணைப்புகளுக்கு வழிகாட்டியாக அமைந்தது. ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் இணை மானியத் திட்டத்தின் கீழ் 2023இல் ரூ.3,00,000 கடனைப் பெற்றனர். அதன் மூலம் தங்களின் தொழில் குழுவை அடுத்த நகர்வுக்கு எடுத்துச் சென்றனர். இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் சர்வதேசச் சந்தைகளில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருவாயை அதிகரித்தனர்.

வருமானம்: ஒவ்வொரு மாதமும் தோராயமாக ரூ.1,00,000 வரை தங்களது பொருள்களை விற்பனை செய்கிறார்கள். விற்பனை மதிப்பில் இருந்து சுமார் ரூ.40,000 வரை லாபம் ஈட்டுகிறார்கள். குழு உறுப்பினர்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்கள் லாபத் தொகையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். தொடக்கத்தில் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்துவது கடினமாக இருந்தாலும், தங்களது கடின உழைப்பால் இவர்களால் வெற்றி பெற முடிந்தது.

வருமானம் பெறுவதோடு பெண்களின் பங்கேற்பு மற்றும் அதிகாரமளிப்பதிலும் சமுதாயத் திறன் பள்ளிப் பயிற்சி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்கள் சொந்தத் தொழிலை நடத்துவதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. இந்தத் திட்டத்தில் உள்ள பெண்கள், தொழில் குழுவை நடத்துவதன் மூலம் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத் திறன்களை வளர்த்துக் கொள்ள முடிந்தது. இது சமூகத்தில் முன்மாதிரியாகவும் தலைவர்களாகவும் அவர்கள் மாற உதவியது.

மறுமலர்ச்சி கண்ட மங்கையர்: கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், அசோகபுரம் ஊராட்சியில் மகளிர் குழுவைச் சேர்ந்த நாங்கள் தையல் தொழில் செய்துவந்தோம். சிறிய அளவில் துணி வியாபாரமும் செய்துவந்தோம். எங்களுக்கு இரவு நேர ஆடைகள் (Nighty) தைக்க ஆர்டர் வந்தது.

எங்களுக்கு நிறைய ஆர்டர் வந்த போதும் அதை எவ்வாறு செய்வது, பணத்திற்கு என்ன செய்யலாம், மேலும் பெரிய அளவில் தொழிலாக மாற்றுவது எப்படி என்றெல்லாம் தெரியாமல் குழம்பி நின்றோம். வழிகாட்டவும், நிதிஉதவி செய்யவும் ஆளில்லாமல் தடுமாறியபோது எங்களுக்கு ஒளி விளக்காக ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் கைகொடுத்தது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டப் பணியாளர் உதவியோடு அலுவலகம்சென்றோம். எங்கள் தொழில் திட்டத்தைப் பற்றிக் கூறினோம். அவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் குழு தொடங்கும் வழிமுறையையும் விதிமுறை களையும் எங்களிடம் எடுத்துக் கூறினார்கள்.

அதிக வட்டியின் காரணமாகத் தனியார் நிறுவனங்களில் கடன் வாங்காமல் இருந்தோம். ஆனால், ‘உங்களுக்கு ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம் 100% மானிய மாகவே நிதி தருகிறோம். நீங்கள் தொழில் செய்து சிறப்புற நடத்தினால் மட்டும் போதும்’ என்று அதிகாரிகள் சொன்னது எங்களுக்குத் தன்னம்பிக்கையையும் வாழ்க்கைக்கான பாதையையும் காட்டியது.

அதன்படி நாங்கள் வங்கிக் கணக்கு தொடங்கிப் பதிவேடுகளைப் பராமரித்துத் தொழில் செய்ய ஆரம்பித்தோம். அப்போது அவர்கள் கொடுத்த தொகை எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. நாங்கள் தொழில் செய்யத் தேவையான அனைத்து உதவிகளையும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செய்தது.

தற்போது தைப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், ஆர்டர் வாங்குவதற்கும் தனித்தனியாக எங்களுக்குள்ளேயே பொறுப்பாளர்களை நியமித்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். எங்கள் வாழ்க்கைக்குப் பேருதவியாக இருந்து மறுமலர்ச்சியை உருவாக்கிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு எங்களது ‘மங்கை மகளிர் குழு’வின் சார்பாகக் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600 / 155 330

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in