நரையோடும் பிரிவு | உரையாடும் மழைத்துளி - 12

நரையோடும் பிரிவு | உரையாடும் மழைத்துளி - 12
Updated on
2 min read

தற்போது ‘Grey Divorce’ என்று ஒன்று இருக்கிறது. அது நமது தமிழ்ச் சமூகத்திலிருந்து மிகவும் தூரமாக இருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருப்பதாலேயே அதைப் பற்றிய புரிதல் பெரும்பாலும் பலருக்கும் இருப்பதில்லை. ‘எப்படி நல்லா வாழ்ந்தாங்க, இப்படிப் பொசுக்குன்னு பிரியுறாங்க’ என்பது போன்ற புலம்பல்களுக்கு நடுவே எதனால் பிரிந்தார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கிறது.

திருமணம் என்கிற பந்தம் ஒரு சமூகத்தில் எதற்காகத் தோன்றி இருக்கக்கூடும்? ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதையும் தனியாகக் கடந்துவிட முடியாது என்கிற ஒற்றைக் காரணத்தால்தான் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லலாம். ஆனால், அது மட்டுமல்ல. ஒரு சமூகத்தில் உடல் சார்ந்த தேவைகளுக்கான வடிகாலை உருவாக்குவதற்காகக்கூடத் திருமணம் என்கிற ஒரு கட்டமைப்பைச் சமூக வியலாளர்கள் அன்றைய தேதியில் உருவாக்கி இருக்கக்கூடும். உடல் தேவை என்று சொல்வதால் அதை மிகவும் கொச்சைப்படுத்தப்பட்ட அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், திருமணம் என்பது உடலும் உள்ளமும் சேர்ந்த ஒரு பந்தமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய விழுதுகள் என்று சொல்லிக்கொள்ள குடும்பத்தில் வாரிசுகள் உருவாவதற்கும் இந்தத் திருமண பந்தமே நமது தமிழ்ச் சமூகத்தில் முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறது.

ஆனால், இன்றைக்குத் திருமணம் என்பது பெரும்பாலும் வியாபாரமாகி விட்டது. திருமணம் என்கிற பந்தம் குறித்து, அதன் அடிப்படை குறித்து நாம் நிறைய தவறான புரிதல்களைக் கொண்டிருக்கிறோம். ஓர் ஆணும் பெண்ணும் ஒரு கூரையின் கீழ் வாழ்வது என்பது அதி அற்புதமான அனுபவம். எப்போது அது அதி அற்புதமான அனுபவமாக மாறுகிறது என்பது விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம். ஆணும் பெண்ணும் என்பது போகவும் - இரு ஆத்மாக்கள் ஒரு கூரையின் கீழ் வாழ்வது என்பது எவ்வளவு முக்கியமானது!

வெவ்வேறு தளங்களில் வளர்க்கப்பட்ட இரு வேறு ஆத்மாக்கள் ஒரே வீட்டில் ஒரே உணவைச் சாப்பிட்டு ஒன்றாகக் தூங்கி வாழ்வது என்பது பேசுவதற்கு வேண்டுமானால் மிகவும் லேசான விஷயமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம்கூடப் பொருந்தாத இருவர் ஒரே கூரையின் கீழ் வாழும்போது அது நரகத்தில் வசிப்பதற்குச் சமமாகிவிடும்.

எங்கள் பக்கத்து வீட்டில் 50 வயது மதிக்கத்தக்க தேவிகா என்று ஒரு பெண் இருந்தார். அவருடைய கணவர், அரசாங்க ஊழியர். கணவர் ஓய்வு பெற்று வந்த நாளில் தேவிகா அவரை ஒரு கோப்பைத் தேநீருடனும் விவாகரத்துப் பத்திரத்தோடும் வரவேற்றார் என்று அறிந்தோம். நாகரிகம் கருதி நானாக தேவிகாவிடம் எதுவுமே கேட்கவில்லை. ஒரு நாள், “நீங்கள் வக்கீல் ஆபீஸ் வரைக்கும் வர இயலுமா?” என்று என்னைக் கேட்டார். ஆட்டோவில் சென்றபோதுதான், “எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீங்கதானே...” என்று என் கைகளைப் பற்றிக்கொண்டார். அப்போதும் அமைதியாக ஆமோதித்துத் தலையசைத்தேனே தவிர, ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று என் மனதில் குடைந்த அந்தக் கேள்வியை நான் அவரிடம் கேட்கவே இல்லை.

ஒரு காபி குடிக்கலாமா என்று ஆட்டோவை ஒரு ஐந்து நிமிடம் வெயிட்டிங்கில் வைத்துவிட்டு ஒரு டீக்கடையில் டீ வாங்கித் தந்தார். “என்னைத் தப்பா பேசுறாங்க. ஆனா, என் பிள்ளைகளுக்கு நான் புரிய வச்சிட்டேன். அதுக்கு மேல எனக்கு எதுவும் தேவையில்லைன்னு தோணுது. ஏன்னா நான் 25 வருஷமா தினமும் காலையில சமைக்கிற ஒரு பொம்பளையா, அடுத்த நாள் சமையலுக்குக் காய் வெட்ற ஒரு ஆளா, துணி துவைக்கிற ஒருத்தியா, அதை மடிச்சு வைக்கிற ஒருத்தியா, அயர்ன் பண்ணி வைக்கிற ஒருத்தியா, சுவையா காபி போடுற ஒருத்தியா, இஞ்சி நுணுக்கித் தேநீர் போடுற ஒருத்தியா, என் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற ஒருத்தியா, குழந்தைகளுக்கு வேன் வருதான்னு பார்க்குற ஒருத்தியா, என் பிள்ளைகளுடைய டியூஷன் டீச்சர் என்ன எழுதி அனுப்பி இருக்காங்கன்னு பார்க்குற ஒருத்தியாதான் வாழ்ந்துட்டு இருந்தேன். என் பேரு தேவிகா இல்லைன்னு எனக்குத் தோணுச்சு. என் பேரு மிஷின் - சரவணன் சார் வாங்கின மிஷின். எனக்கு எல்லாமே போதும்னு பட்டுச்சு.

நான் தேவிகாவா வாழ நினைச்சேன். அதை அப்பட்டமா சொன்னா சரவணன் சார் ஒத்துக்க மாட்டார். ஏதாவது ஒரு காரணம் சொல்லி நான் விலகணும். அதனால, எனக்கு இந்த வயசுக்கு மேல தாம்பத்ய உறவுல நாட்டம் இல்லைன்னு எழுதிக்கலாமான்னு வக்கீல் கிட்ட கேக்கணும்னுதான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்” என்று சொன்னார். அவருடைய கண்கள் பனித்திருந்தன.

நான் பதில் பேசாமல் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டபோது அவர், “இப்போகூட யாரோ பாப்புலர் ஜோடி வயசு காலத்துல விவாகரத்து பண்றதா சொல்லி இருக்காங்க. அதுக்கு எவ்ளோ நெகட்டிவ் கமென்ட்ஸ். எதுக்கு எங்க விஷயத்தைப் பத்தி மத்தவங்களுக்கு இவ்ளோ அக்கறை, ஆர்வம்? இதுக்கு முன்னால நாங்க சேர்ந்து இருக்கிறப்ப பிரச்சினை வர காலத்துல எல்லாம் இல்லாத அக்கறை, இப்ப எங்கேருந்து வருது? இதுக்குப் பேரு ஆர்வமோ அக்கறையோ இல்ல. அடுத்த வீட்டு ஜன்னலில் மூக்கை நுழைக்கிறது. பொடமூக்கின்னு எங்கூர்ல சொல்லுவாங்க” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

தேநீருக்கான காசை தானே கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்திவிட்டு, பணத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார். எனக்கு உட்கார்ந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. ஆனாலும் அங்கிருந்து ஓடிச் சென்று அவரை இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது.

“தேவிகா...” என்று ஒரு முறை அவருக்குக் கேட்குமாறு அழைத்தேன். அவர் திரும்பிப் பார்த்தார்!

- (உரையாடுவோம்)
dhamayanthihfm@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in