

வரலாற்றில் சுவாரசியமான சந்திப்புகள் பெரும்பாலும் பெண்களாலேயே நிகழ்ந்திருக்கின்றன. அப்படி நினைவுகூரும் ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறார்கள் ஜோதி ஆம்கே, ருமேசா கால்கி இருவரும். இந்தியாவைச் சேர்ந்த ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.7 அங்குலம்.
துருக்கியைச் சேர்ந்த ருமேசா கால்கியின் உயரம் 7 அடி 1 அங்குலம். உலகில் உயரம் குறைவான பெண்ணாக ஜோதியும் உலகின் உயரமான பெண்ணாக ருமேசாவும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பின் 70ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், சில நாள்களுக்கு முன் லண்டனில் தேநீர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஜோதியும் ருமேசாவும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் முதல் சந்திப்பிலேயே பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக்கொண்டது பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ஜோதியைக் கண்டதும் மகிழ்ச்சி ததும்ப வரவேற்ற ருமேசா, “ஜோதி நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” எனப் பணிவாகக் கூறினார். அதற்குத் தனது மழலை மாறாக் குரலில் நன்றி தெரிவித்த ஜோதி, “ருமேசா நீங்களும் அழகான பெண்தான்” என்றார்.
ஒரு குவளை தேநீருடன் ஜோதி - ருமேசா இருவருக்கும் இடையிலான உரையாடல் தொடர்ந்தது. இருவரும் தாங்கள் கடந்து வந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், காதல், சுய மதிப்பு, ஒப்பனைகள், பொழுதுபோக்கு போன்றவை குறித்தெல்லாம் பேசிக்கொண்டனர்.
“ஆறு வயது இருக்கும்போதே 5 அடி 8 அங்குலம் வளர்ந்துவிட்டேன். நமது சமூகக் கட்டமைப்பில் பெண்கள் ஆண்களைவிட உயரமாக இருக்கக் கூடாது. மாறாக உயரமாக வளர்ந்துவிட்டால் வித்தியாசமாக நடத்தப்படுவார்கள். எனக்கும் அதுதான் நிகழ்ந்தது. பிற சிறுமிகளைப் போல் பள்ளிக்குச் செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. மரபணுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதால் என் எலும்புகள் சிறுவயது முதலே அபரிமிதமாக வளரத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாகப் பள்ளிப் பருவத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
இணையம் மூலமாகவே பள்ளிப் படிப்பை முடித்தேன். எனக்குப் பெரிய அளவில் நண்பர்களும் கிடையாது. சிறு வயதிலிருந்தே உடல்ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறேன். என் குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர். எனது உயரத்துக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது என் சுயம் சார்ந்த நம்பிக்கையை அதிகரித்தது. ஜோதியைப் பார்க்க வேண்டும் எனப் பத்து ஆண்டுகளாகக் காத்திருந்தேன். தற்போது அது நடந்துள்ளது” என்றார் ருமேசா.
ஜோதியோ, “என் அன்றாடத்தை என் குடும்பத்தினர் எளிதாக மாற்றியுள்ளனர். வீட்டில் என் உயரத்துக்கு ஏற்றபடி பொருள்கள் இருப்பதால் பெரும்பாலும் என் உயரம் சார்ந்து சிரமத்தை உணர்ந்ததில்லை. ஆனால் வெளியுலகம் அவ்வாறு இல்லை.
பிறரின் துணை இல்லாமல் என்னால் வெளியே செல்ல முடியாது. அதனால், ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், கின்னஸ் சாதனை அமைப்பு என் உயரத்துக்கு அளித்த அங்கீகாரம் என் நம்பிக்கையை அதிகரித்தது. மக்களுக்கு என்னைத் தெரியவைத்தது. நடிகையாக வேண்டும் என்கிற என் ஆசையையும் நிறைவேற்றியது” எனக் கூறினார்.
தங்களைப் போன்ற பாதிப்புள்ள மக்கள் துவண்டு விடாமல் இருக்க முன்மாதிரிகளாகத் தங்களது செயல்பாடுகள் இருக்கும் என்றும் இருவரும் உறுதி அளித்தனர். உரையாடலின் இறுதியில் இருவரும்
தாங்கள் கொண்டுவந்திருந்த பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
நடிகையாக வேண்டும் என்கிற கனவில் ஜோதியும், வெப் டெவலப்பராக ருமேசாவும் தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர். போரும் வன்முறைகளும் இயல்பாகிப் போன காலக்கட்டத்தில் அன்பையும் மனிதத்தையும் வெளிப்படுத்திய ருமேசா - ஜோதியின் உரையாடல் பலரது மனங்களையும் வென்றிருக்கிறது. பெண்களின் தனித்துவமே இதுதான்!
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in