

சமூக வலைதளங்களில் இன்றைக்கு அதிகமாகப் பேசப்படுவது திருமணத்தை மீறிய உறவுதான். ஏன் இப்படியான உறவுகள் தற்போது அதிகரிக்கின்றன என்று யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. அதை விட்டுவிட்டுப் புறணி பேசும் பாணியிலான வார்த்தைகளே அதிகமாகப் புழங்குகின்றன. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இவை பற்றிய காணொளிகளில் பலரும் அதிக ஆர்வத்துடன் பதிவிடுகின்றனர்.
சமூகம் பார்ப்பதுபோல் உறவுகள் எல்லாமே வெறும் பாலுறவு சம்பந்தப் பட்டவைதானா என்றால் முழுக்க முழுக்க உடல்ரீதியான ஈர்ப்பு மட்டுமே என்று சொல்லிவிட முடியாது. இன்றைய இயந்திரத்தனமான வாழ்வில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பரஸ்பரப் புரிதலும் அன்பும் எங்கோ ஓரிடத்தில் விடுபட்டுவிடுகிறது. அதே வேளை பெண்களும் ஆண்களுக்கு நிகராக
வேலை பார்க்கும் தருணங்களில் வெளியிடங்களில் சந்திக்கும் ஒருவர் அன்பைப் பகிரும்போது அந்தப் பெண்ணின் மனம் இளகிவிடுகிறது. இயந்திரத்தனமான ஓர் உறவுக்குள் இருக்கக்கூடிய ஆண் மனமும் தன்னை நோக்கி அன்பான வார்த்தைகளைப் பேசும் பெண்ணிடம் அமிழ்ந்துபோகிறது.
‘காலம் மிகவும் கெட்டுப் போய்விட்டது’ என்றெல்லாம் பலர் சொல்லி நாம் கேட்கிறோம். ஆனால், சமூக வலைதளங்கள் இல்லாத காலக்கட்டத்தில் மிக ரகசியமாக இருந்த இந்த உறவுகள், தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வருகின்றன என்பதே உண்மை. சில மனங்கள் இப்படியான ஓர் உறவு நமக்கு வாய்க்கவில்லையே என்றுகூடப் பதறுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இருபாலரும் படிக்கும் கல்லூரியில்தான் முதுகலை படித்தேன். எங்களிடையே பாலினம் சார்ந்த வேறுபாடுகள் இருந்ததில்லை. இன்றுவரை எங்களிடையே நல்ல நட்பும் உறவும் தொடர்பும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. வாழ்க்கையில் யாருக்கு
எது நடந்தாலும் நாங்கள் ஒருவருக்கு மற்றொருவர் துயரத்தைப் பகிர்ந்துகொண்டும் ஆலோசனைகள் சொல்லியபடியும்தான் இருக்கிறோம். எங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் அதைச் சந்தேகக் கண்ணோடு பார்க்காதது நாங்கள் பெற்ற வரம். ஆனால், எல்லாருக்கும் இந்த வாய்ப்பிருக்கிறதா என்பது சந்தேகமே. அப்படிப்பட்டவர்கள் ஓர் ஆண் நட்பின் அல்லது பெண் நட்பின் நீள அகலத்தைப் புரிந்துகொள்ளாமலேயே தங்கள் வாழ்க்கை முழுவதும் ஏதோவோர் ஏக்கத்துடன் கழித்தபடி இருக்கிறார்கள்.
ஆண்களுடனான நட்பு பெண்களுக்கு மிகவும் அவசியம். அதுபோலவே பெண்களின் நட்பும் ஆணுக்கு மிக அவசியம். இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பெயர்களுடன் காணப்படும் இத்தகைய உறவுகள் குறித்த குழப்பங்களில் இருந்து சமூகம் இன்னும் மீளவில்லை. நட்பில் இருந்து காதல் மலர்வதை இந்தச் சமூகம் ஒப்புக்கொள்வதே இல்லை. ‘நீங்க முதல்ல பிரெண்ட்ஸ்னு பொய்தானே சொன்னீங்க?’ என்று பலர் கேட்பதை நான் பார்த்திருக்கிறேன்.
இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில்தான் திருமணமான ஓர் ஆணும் பெண்ணும் நட்பாகப் பழகி EMA எனச் சொல்லப்படும் extra marital affairஇல் விழுகிறார்கள். பல சமூகக் குற்றங்கள் இத்தகைய உறவின் அடிப்படைக் குழப்பங்களாலேயே நிகழ்கின்றன. வெளியே சொல்ல முடியாத குற்ற உணர்வோடுதான் இதில் திளைக்கும் மனிதர்கள் நம்மிடையே அலைகிறார்கள். என்னிடம் உரையாடிய ஒரு தம்பதி தனித்தனியாகப் பேசிய விஷயங்களிலும் சேர்ந்து பேசிய உரையாடல்களிலும் நிறைய வேறுபாடு இருந்தது. வேறுபாடு என்று நான் நாகரிகமாகச் சொல்வது அவர்கள் சேர்ந்து உரையாடும்போது சொல்லிக்கொண்ட பொய்களை.
பல ஆண்கள் தங்களைத் திருமணம் செய்த பெண் ஒரு தனிநபர் என்பதை மறந்துவிடுகிறார்கள். பெண்களும் அப்படியே. பல பெண்கள், தங்கள் கணவர் வீட்டாரை ஒரு வெறுப்புணர்வோடுதான் பார்க்கிறார்கள். அதற்கு முக்கியக் காரணமாகப் பெண்ணின் தாயே ஆகிவிடுவது வேதனை. அந்தப் மாமியார் தன் சொந்த வாழ்வில் நடந்த விஷயங்களைத் தன் மகளின் வாழ்வோடு இணைத்துவிடுகிறார். அது மிகப்பெரிய பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது. அந்த மருமகன் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற இன்னொரு பெண்ணைப் பார்க்கும்போது அந்த அன்பில் அப்படியே ஐக்கியம் ஆகிவிடுகிறார். திருமணம் மீறிய உறவுகளில் இருக்கக்கூடிய மன இடைவெளிகளை நாம் சரிசெய்து சமன்செய்யாவிட்டால் இத்தகைய உறவுகள் திருமணத்தை என்கிற கட்டமைப்பை உடைத்துவிடும். இப்போதே பெருகிவரும் விவாகரத்துகள் இதற்கு மிகப்பெரிய உதாரணங்கள்.
தங்கள் துணையைப் பிடிக்காதவர்கள் ஏன் ஒரே கூரையின்கீழ் வாழ வேண்டும்? சமூக நிர்பந்தத்துக்காக அவர்கள் அப்படி வாழ்வது அவர்களுக்கு அவர்களே கொடுத்துக்கொள்ளும் பெரிய தண்டனை. அந்தத் தண்டனை தேவையே இல்லை என்றாலும், சட்டம் மீறிய உறவை அவர்கள் சரி செய்துகொள்ள வேண்டும். அது தனிப்பட்ட நபர்களின் கைகளில் மட்டுமே இருக்கிறது.
(உரையாடுவோம்)