

ஓவியங்களில் நாள்தோறும் புதுப்புது மாற்றங்கள் ஏற்பட்டாலும் தஞ்சாவூர் ஓவியம், கேரள சுவரோவியம் போன்ற பாரம்பரிய ஓவியங்களுக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் புள்ளி ஓவியம் (Dot Painting) தற்போது உலக அளவில் கவனம் பெற்றுவருகிறது. இந்த வகைப் ஓவியங்களை வரைவதில் வல்லவராக இருக்கிறார் கோவையைச் சேர்ந்த அபிநயா சுந்தரம்.
அம்மா தையல் கலைஞர் என்பதால் சிறு வயதிலிருந்தே அபிநயாவுக்கு ஆடை வடிவமைப்பதிலும் ஓவியங்கள் வரைவதிலும் ஈடுபாடு ஏற்பட்டது.
“அம்மா தையல் மிஷினில் துணிகளைத் தைக்கும்போது நானும் பக்கத்துல இருந்து பார்ப்பேன். சில நேரம் எனக்குத் தெரிஞ்ச ஆலோசனையையும் சொல்வேன். பள்ளி, கல்லூரி நாட்களில் படிப்பில் முதல் இடம் பிடிக்கிறேனோ இல்லையோ, ஓவியப் போட்டிகளில் கண்டிப்பா எனக்குதான் முதலிடம்” எனப் புன்னகைக்கிறார்.
எம்.பி.ஏ. முடித்திருக்கும் அபிநயா, ஐ.டி. துறையில் பணியாற்றியபோது தான் செல்லும் ஊர்களில் பார்க்கும் விஷயங்களை ஓவியமாக வரைந்திருக்கிறார். தொடக்கத்தில் பென்சில் ஆர்ட், பென் ஆர்ட் என வரைந்தவர், பின்னர் வண்ணங்களுக்குப் பதிலாக காபித் தூளைக் கொண்டு வரையப்படும் ‘காபி ஓவிய’த்தைக் கையிலெடுத்தார்.
“ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் புள்ளி ஓவியங்களைப் பற்றி இணையதளம் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன். ஆன்லைன் மூலம் அந்த ஓவிய முறையைக் கத்துக்கிட்டேன். மரப்பலகை, கண்ணாடி பாட்டில், கூழாங்கற்கள், பழைய பொருட்களில் அதை வரையத் தொடங்கினேன். இப்படி வரையும் ஓவியங்களை நண்பர்களுக்குப் பரிசாகக் கொடுத்தேன். நல்ல வரவேற்பு கிடைச்சதால புள்ளி ஓவியத்தை முழு நேரமாகச் செய்ய முடிவெடுத்தேன்” என்று சொல்லும் அபிநயா, இரண்டு ஆண்டுகளாகப் புள்ளி ஓவியங்களை வரைந்துவருகிறார்.
வார இறுதி நாட்களில் ஓவியப் பயிற்சி வகுப்புகளை எடுத்துவரும் அவர் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களிலும்
புள்ளி ஓவியங்களுக்கெனப் பயிலரங்கு
நடத்தி வருகிறார்.