

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை அமைந்தகரையில் பணிப்பெண் ஒருவர் மிக மோசமான முறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை நாம் செய்தியாக வாசித்திருப்போம். அதோடு அதைக் கடந்துவிட்டு நம்முடைய அன்றாட வேலைகளில் மூழ்கியிருப்போம்.
இளம் வயதுப் பெண்களுடைய பிரச்சினைகள் குறித்து இந்தச் சமூகம் பெரிதாகக் கவலைப்படவோ அக்கறைப்படவோ இல்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஒரு பெண் குழந்தைப் பருவத்திலிருந்து விடலைப் பருவத்திற்கு மாறும்போது ஏற்படக்கூடிய உடல்ரீதியான, மனரீதியான பாதிப்புகள் குறித்துப் பெரிதாக நாம் விவாதிப்பதே இல்லை. வீடுகளில்கூட ரகசியமாகப் பேசுவதில்லை.
நினைக்க முடியாத அநியாயம்
இப்படியொரு காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியாக நலிந்து இருக்கக்கூடிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் பிள்ளைகளைப் பெரும்பாலும் ஃபேக்டரிகளுக்கோ வீட்டு வேலைகளுக்கோ குடும்பங்கள் அனுப்பி வைக்கின்றன. அப்படி அனுப்பி வைக்கப்படும் அந்தப் பெண் பிள்ளைகள் புதிதான ஒரு குடும்பச் சூழலில் புதிதான ஓர் ஊரில் வாழ்வது முதலில் அவர்களைப் பரவசப்படுத்தினாலும் தொடர்ந்து அவர்களுக்குக் கொடுக்கப்படும் பணிச்சுமையினாலும் அங்கு இருக்கக்கூடிய தன்மைகள் தன் வாழ்வில் இல்லை என்கிற விரக்தியாலும் பெரும்பாலும் மன அழுத்தம் கொண்டவர்களாகவே வாழ்கின்றனர்.
அமைந்தகரையில் நடைபெற்ற இந்தக் கொலையின் பின்னணியைக் கேட்டால் ஒரு நிமிடம் மனம் அதிர்கிறது. எவ்வளவு கொடூரமான கொலை. சிகரெட்டால் சுட்ட வடு, கழுத்தை அழுத்திப் பிடித்துக் கொலை செய்ததற்கான தடங்கள்... இவை எல்லாம் 16 வயதே நிரம்பிய ஒரு பெண் அனுபவித்திருக்கிறாள் என்பதை யோசிக்கும்போதே ஒவ்வொரு நரம்பும் சுருண்டு கொள்கிறது. எவ்வளவு பெரிய அநியாயத்தைக் கொஞ்சம்கூடக் குற்றவுணர்வே இல்லாமல் அவர்கள் செய்திருக்கக்கூடும்.
கைதான பெண்களில் ஒருவர் வாக்குமூலம் என்கிற பெயரில், வேலைக்கு வந்த பெண்ணைத் தன் கணவர் இச்சையோடு பார்த்தார் என்றும் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவளுக்கு நிறைய வேலைகள் கொடுத்து - அவள் மேல் திருட்டுப் பட்டம் கட்டி அதன் பின் எல்லாரையும் அழைத்து நியாயம் பேசி அவளை அநியாயமாக, கொஞ்சம் கொஞ்சமாகக் குரூரமாகக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்கிறார். கழிவறையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அவர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் கணவனும் மனைவியும் கிளம்பி கணவனுடைய தங்கை வீட்டில் அடைக்கலம் புகுந்து இருக்கிறார்கள். அங்கிருந்து ஒரு வழக்கறிஞரை அழைத்து விஷயத்தைச் சொன்னதும் அந்த வழக்கறிஞர் காவல்துறையில் இக்கொலையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.
ஒடுக்கும் பெண்கள்
சில மாதங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு விவாத நிகழ்ச்சியில் பணிப்பெண்களின் பிரச்சினைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.பணிப்பெண்களை அயல்பிரதேசத்து உயிரினங்களாக நினைத்து அவர்களுக்குத் தனித் தட்டு, தனி டம்ளர் போன்றவற்றைக் கொடுப்போம் என்று அவர்களை வேலைக்கு வைத்திருக்கும் ‘முதலாளிகள்’ கொஞ்சம்கூடக் கூச்சநாச்சமே இல்லாமல் தெரிவித்தார்கள். அப்படிச் சொன்ன எல்லாருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களிடம்தான் ஆண்களைக் காட்டிலும் ஆணவமும் சமூகத்தில் பொருளாதாரரீதியாக உயர்ந்து நிற்கும் கர்வமும் அதிகம் உள்ளதோ என்று எனக்கு எப்போதுமே தோன்றியிருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் ஏதோ ஒருவிதத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து தங்களுடைய விருப்பங்கள் குறித்தோ தங்களுடைய ஆசைகள் குறித்தோ தங்கள் வாழ்க்கை குறித்த முடிவுகள் குறித்தோ தன்னிச்சையாகச் செயல்பட முடியாமல் நசுக்கப்பட்டே வந்திருக்கிறார்கள். அதனாலேயே எங்கெல்லாம் அவர்களுக்குப் பிறரை ஒடுக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கெல்லாம் அவர்கள் அதைப் பிரமாதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வரும் என்று அறிந்தேதான் இதை எழுதுகிறேன். இப்படி எழுத வேண்டி இருக்கிறதே என்று கூச்சப்படவும் செய்கிறேன். ஆனால், இதுவே உண்மை.
கை நழுவிய கனவு
ஒரு பெண் தன் வீட்டில் பணிசெய்ய வரும் பெண், தனக்கு ஒவ்வாத விஷயங்களைச் செய்தாலோ அவரது பணியைச் சிறப்பான முறையில் செய்யவில்லை என்றாலோ அவரைப் பணிநீக்கம் செய்திருக்கலாம். ஓர் உயிரை எடுக்கும் அளவிற்கு அது செல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதற்குப் பின்னால் மறைக்கப்பட்ட வேறு ஒரு விஷயம் இருக்கவே செய்கிறது என்று என்னுடைய மனம் சொல்கிறது.
ஒரு பத்தியாகச் செய்தித்தாள்களில் முடிந்துவிடக்கூடிய மரணமாக எனக்கு இந்த இளம் பெண்ணின் மரணம் பிடிபடவே இல்லை. இளம்பெண் என்று எழுதுவதை காட்டிலும் 16 வயதுச் சிறுமி என்று எழுதவே தோன்றுகிறது. எத்தனைவிதமான கனவுகளோடு அவள் இந்தப் பெருநகரத்திற்குத் தன்னுடைய சிறு ஊரில் இருந்து வந்திருப்பாள் என்று தோன்றுகிறது. அது பேருந்துப் பயணமா, ரயில் பயணமா என்று தெரியவில்லை. ஆனால் அவளுடைய மனதில் என்னென்ன யோசனைகள் எல்லாம் அந்த நேரத்தில் வந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கையில் மனம் விசும்புகிறது.
இங்கே வந்த சிறிது காலத்தில் அவள் எவ்வளவு வேதனைகளை அனுபவித் திருப்பாள், பட்டினியை அல்லது அதிகப் பணிச் சுமையை அனுபவித் திருப்பாள் என்று தெரியவில்லை. ஆனால், சொல்லப்படாத அவளுடைய மன வார்த்தைகள் எந்த இடத்திலோ அலைந்தபடி இருக்கும் என்று எனக்கு யோசனையாக இருக்கிறது. அந்தச் சக்திதான் என்னுடைய மனம் வழியாக, விரல்களின் வழியாக வார்த்தைகளாக மாறிக்கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் எனக்கு இருக்கிறது.
பணிச் சட்டங்கள் என்று நிறையவே இருக்கின்றன. ஆனால், அவை எல்லாம் நிலுவையில் இருக்கின்றனவா என்று சந்தேகமாக இருக்கிறது. சிறுவர்கள்/சிறுமியர் மரணத்தை இந்த அரசாங்கம் வெகு தீவிரமான ஒரு விசாரணைக்குள் கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. அந்தக் குற்றவாளிகள் 90 நாள்களில் ஜாமீனில் வெளியே வந்துவிடக்கூடும். ஆனால் அந்த உயிர்?
(உரையாடுவோம்)
- கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: dhamayanthihfm@gmail.com