

கொண்ட கொள்கையில் உறுதியோடும் பற்றோடும் ஓடிக்கொண்டே இருந்தால் நமக்கான அங்கீகாரம் தானாகத் தேடிவரும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் மும்தாஜ். கிராமப்புறக் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த ஆய்வுக்காகவும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது சார்ந்த பணிகளுக்காகவும் ‘ஆத்விகா’ விருதைப் பெற்றிருக்கிறார்.
மும்தாஜ், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். தந்தையின் பணி நிமித்தம் சிறுவயதிலேயே இவரது குடும்பம் திருப்பத்தூரில் குடியேறியது. படிப்பில் ஆர்வத்துடன் இருந்த மும்தாஜ், இளங்கலை - முதுகலை இரண்டிலும் ‘ஹோம் சயின்ஸ்’ படித்தார். பிறகு, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்
எம்.ஃபில் சேர்ந்தார். இதற்கிடையே பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசியத் தகுதித் தேர்வில் (என்.இ.டி) வெற்றிபெற்றார்.
“கிராமப்புறக் குழந்தைகள் மத்தியில் ஆய்வு செய்வதற்கான திட்டமொன்றை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அறிவித்திருந்தது. அதற்கான தேர்வில் வென்று ‘இளம் தொழில்முறையாளர்’ என்கிற தகுதியைப் பெற்றேன். 2001 முதல் 2003 வரை இரண்டு ஆண்டுகள் அந்த ஆய்வுப் பணியில் இருந்தேன். ஊரக வளர்ச்சித் துறைக்காக ஏழு திட்டங்களில் பணியாற்றினேன்” என்று சொல்லும் மும்தாஜ், இரண்டு ஆண்டுப் பணிக்குப் பிறகு மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை அறிவித்திருந்த பெண் விஞ்ஞானிகளுக்கான நிதிநல்கையோடு கூடிய ஆய்வுக்கு விண்ணப்பித்தார்.
“அந்தத் திட்டம் 2004ஆம் ஆண்டுதான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட அந்த ஆய்வுத் திட்டத்தில் 88 பேரில் ஒருவராக நானும் தேர்வானேன். நம் உணவில் நுண்ணூட்டச்சத்தின் தாக்கம் குறித்த ஆய்வில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டேன். இடையில் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் பி.எச்டி. படிப்பில் சேர்ந்தேன். படிப்பும் ஆய்வும் இணைந்த பயிற்சி அது” என்கிறார் மும்தாஜ். 2007இல் பி.எச்டி முடித்தவர், மத்திய அரசுக்காகத் தான் மேற்கொண்ட ஆய்வைப் புத்தகமாக 2009இல் வெளியிட்டார்.
சேவைக்காக ஓர் அமைப்பு
கிராமப்புறக் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து ஆய்வு செய்வதற்காக ‘நியூ பார்ன் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பை 2007இல் தொடங்கினார். அரசுப் பள்ளிக் குழந்தைகளிடையே நிலவும் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டைக் களைவதற்கான முயற்சியாகவும் அது அமைந்தது.
“அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் உடல் - உணர்வுரீதியான வளர்ச்சியையும் அது சார்ந்த அறிவாற்றலையும் கணக்கிடும் ஆய்வாக அமைந்தது. குழந்தைகளின் உயரம், எடை, பார்வைத் திறன், சரும ஆரோக்கியம் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடைய நுண்ணூட்டச்சத்துகளை அவர்கள் போதுமான அளவு எடுத்துக்கொள்கிறார்களா என்பதுதான் ஆய்வின் அடிப்படை. வங்கிகளின் நிதியுதவியோடும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டும் வேலையைத் தொடங்கினோம். பள்ளிக்குச் சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்தோம்.
இன்னொரு பள்ளியில் சமைக்கப்படும் மதிய உணவுதான் நாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளிக்குக் கொண்டுவரப்படும் என்பதால் அந்தப் பள்ளிக் குழந்தைகள் சாப்பிட்டு முடித்த பிறகே இங்கு உணவு எடுத்துவரப்பட்டது. அதற்கே மணி மதியம் இரண்டரையைத் தாண்டிவிடும்.
இங்கிருக்கும் குழந்தைகள் இப்படிப் பசியோடு காத்திருப்பதைத் தடுக்க இங்கேயே உணவு சமைக்க எங்கள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு ஆரோக்கிய அட்டை வழங்குவதற்காக அவர்களது ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தபோது அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தன. மூன்று குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
உடனே இதை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். குழந்தைகளையும் அவர்களைச் சார்ந்தவர் களையும் கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்பதால் ஆய்வு முடிவுகளை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு நாங்கள் விலகிக்கொண்டோம்” என்று சொல்லும் மும்தாஜ், அதன் பிறகு ஆய்வைத் தொடரவில்லை.
இவர், ‘நாக்’ கமிட்டியில் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார். அந்த அனுபவத்தின் மூலம் உயர் கல்வியின் தரம் உயர்த்தும் நோக்கிலான பணிகளிலும் ஈடுபட்டார். தற்போது பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா பல்கலைக்கழகத்தின் தர உறுதி இயக்குநராகச் செயல்பட்டுவரும் மும்தாஜ், தான் பொறுப்பேற்று ஒரே ஆண்டுக்குள் கல்லூரியின் தரத்தை ‘ஏ பிளஸ்’ ஆக முன்னேற்றியிருக்கிறார்.
“கர்நாடகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் ‘அக் ஷய பாத்ரா’ நிறுவனத்தின் உணவுத் திட்டத்தை வடிவமைப்பதிலும் உதவியிருக்கிறேன். நுண்ணூட்டச் சத்துகள் குறித்து நான் மேற்கொண்ட ஆய்வும் களப்பணிகளும் அதற்கு உதவின” என்று சொல்லும் மும்தாஜ், இடைவிடாத உழைப்புதான் வெற்றியின் ரகசியம் என்கிறார்.மும்தாஜ்